* பார்க்கிங் கட்டணத்தில் முறைகேடு * பொதுமக்கள் புலம்பல்
ஊட்டி : ஊட்டி கமர்சியல் சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதால் உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. சுற்றுலா நகரமான இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதுதவிர உள்ளூர் மக்களும் பல்வேறு பணிகளுக்காக வருகின்றனர். பார்க்கிங் பிரச்சனை ஊட்டி நகரின் நீண்டகால பிரச்சனையாக உள்ளது. நகரின் சில இடங்களில் கட்டண பார்க்கிங் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் கட்டணம் செலுத்தி வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படுகின்றன. நகரின் முக்கிய சாலையாக கமர்சியல் சாலை விளங்கி வருகிறது. இச்சாலையில் உணவகங்கள், ஆடையகங்கள், சாக்லேட், வர்க்கி, நீலகிரி தைலம் உள்ளிட்ட உள்ளூரில் பிரசித்தி பெற்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு உணவருந்தவும் பொருட்கள் வாங்கவும் சுற்றுலா பயணிகள் கமர்சியல் சாலையை பயன்படுத்துவது வழக்கம். இச்சாலையில், சேரிங்கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை வலது புறத்தில் கார்கள் கட்டணமின்றி பார்க்கிங் செய்யப்பட்டு வந்தன.
இதனால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வந்ததுடன், கமர்சியல் சாலையில் கடைகள் வைத்துள்ளவர்கள் காலை முதல் இரவு வரை தங்களது வாகனங்களை நிறுத்தி கொள்வதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தங்கள் வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இச்சாலையில் சேரிங்கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக வாக்கிங்-வே திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இத்திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால், இத்திட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கேசினோ சந்திப்பு முதல் சேரிங்கிராஸ் சிக்னல் பகுதி வரை உள்ள இலவச பார்க்கிங் கட்டண பார்க்கிங்காக மாற்றப்பட்டு ஊட்டி நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டது. இதனை தொடர்ந்து கமர்சியல் சாலையில் வாகனங்கள் நிறுத்த கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கி முன்புறம், கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் எதிர்புறம் உள்ள சாலையோரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு இம்மாத துவக்கத்தில் ரூ.30 பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆதாம் நீருற்றுக்கு எதிப்புறமுள்ள இடத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு கடந்த சில நாட்களாக ஒரு மணி நேரம் நிறுத்துவதற்கு ரூ.20 பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
மேலும், கடைகளுக்கு முன்பு வாகனங்கள் நிறுத்துவதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகளும் தொிவிக்கின்றனர். எனவே, கமர்சியல் சாலையில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் டெண்டரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து உள்ளூர் பொதுமக்கள் கூறுகையில், ‘‘மாவட்ட நிர்வாகம் மக்களிடம் எவ்வித கருத்துக்களையும் கேட்காமல் உள்ளூரில் உள்ள சில தன்னார்வ அமைப்புகளின் பேச்சை கேட்டு கொண்டு கமர்சியல் சாலையில் வாக்கிங்-வே அமைப்பதாக கூறி வாகனம் நிறுத்த தடை விதித்தது. இந்த திட்டம் வெற்றியடையாத நிலையில், கமர்சியல் சாலை பார்க்கிங் கட்டண பார்க்கிங்காக மாற்றப்பட்டுள்ளது.
அதிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்களுக்கு ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இது உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவசர வேலைக்காக சில நிமிடங்கள் சாலையோரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவது வேதனையான ஒன்று. ஏற்கனவே அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஊட்டி நகராட்சி ஆணையரிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.11 லட்சத்திற்கு மேல் பிடிப்பட்டது.
அப்போது, இந்த பார்க்கிங் எடுப்பதற்கான விடப்பட்ட டெண்டரிலும் முறைகேடு நடந்ததுள்ளதாக லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு பார்க்கிங் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினரும் தெரிவித்திருந்தனர்.
எனவே, இந்த டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகும் நிலையில், கமர்சியல் சாலை பார்க்கிங் டெண்டரை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டரும் தன்னிச்சையாக எவ்வித முடிவுகளையும் எடுக்காமல் உள்ளூர் மக்களின் கருத்துகளை கேட்டு, அதிகாரிகளை கொண்டு ஆய்வுகள் மேற்கொண்டு சாத்தியமான திட்டங்களை மட்டும் செயல்படுத்த வேண்டும்’’ என்றனர்.