நாகர்கோவில் : நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்த நிலையில் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கி மதியம் வரை நடந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்க கேட்டு மனுக்களை அளித்தனர். கொட்டும் மழையிலும் பொதுமக்கள் மனுக்களுடன் வருகை தந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கணினிகளில் மனுக்கள் ஆன்லைனில் பதிவு செய்தல் நடந்தது.
இங்கு நீண்ட வரிசையில் நின்று மக்கள் மனுக்களை பதிவு செய்தனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மனுக்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் நடந்தது. கோரிக்கை மனுக்கள் அளிக்க வருகின்ற சிலர் அவ்வப்போது கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி திடீர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்ற நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சுழலும் கண்காணிப்பு கேமரா உதவியுடன் கண்காணிப்பு பணிகள் நடந்தது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பொதுமக்கள் கொண்டு வந்த உடைமைகள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை போலீசார் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.
345 கோரிக்கை மனுக்கள்
நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 345 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட கலெக்டர் அழகுமீனா, துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுலவர் மோகனா, துணை காவல் கண்காணிப்பாளர் பிச்சையா, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.