பந்தலூர் : பந்தலூர் அருகே உப்பட்டி மேஸ்திரிகுன்னு பகுதியில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொது மக்கள் நெல்லியாளம் நகராட்சியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட உப்பட்டி மேஸ்திரிகுன்னு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனவும் சாலை வசதி, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்து, சம்பவ இடத்திற்கு முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி விரைந்து சென்று நகராட்சி மேலாளர் சுகுமாரிடம் பேசி, உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மேலும் நடைபாதை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் அறிவுறுத்தினார். இதையடுத்து நகராட்சி மேலாளர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன் பின்னர் சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு முடிவுக்கு வந்தது.