சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசு மாநில சிவில் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது. இந்த உயர்வால் சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.10 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
அதேபோன்று, பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசு தொகை ரூ.500ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கி அரசு ஆணையிடுகிறது. இதன்மூலம் சுமார் 4 லட்சத்து 70 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.24 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இந்த பண்டிகை முன்பணம் உயர்வு இந்த அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வரும். இந்த பண்டிகை முன்பணம், 10 மாதங்களுக்கு சமமான தவணைகளில் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.