‘டில்லி பெண்கள் ஆணையத்தில் உதவி கேட்டு, ஓராண்டில் 6.30 லட்சம் பெண்கள் அழைத்துள்ளனர்’ என அதன் தலைவி ஸ்வாதி மாலிவல் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி கடந்த ஜூலை 2022 முதல் ஜூன் 2023 வரை 6.30 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், உதவி கேட்டு டில்லி பெண்கள் ஆணைய உதவி எண் 181க்கு போன் செய்துள்ளனர். இதில் குடும்ப வன்முறை, பாலியல் சீண்டல், பலாத்காரம், சிறுமியர் மீதான பாலியல் வ ன்கொடுமை, கடத்தல் மற்றும் இணையவழி குற்றங்கள் என, 92,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்கள் ஆணையத்தின் உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கும். போன் செய்து உதவி கேட்கும் பெண்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால், டில்லி போலீஸ் மருத்துவமனை மற்றும் தங்குமிடங்கள் போன்ற அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகின்றன. டில்லி ஒரு பகுதியில் மட்டுமே 6.30 லட்சம் புகார்கள் எனில் இந்தியா முழுக்க எத்தனைப் புகார்கள் வரும்.
எத்தனைப் பெண்கள் புகார் அளித்தால் கூட ஆபத்து உண்டாகுமோ என தனக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்லாமல் இருக்கிறார்கள். இது ஒரு மாநிலத்தில் வந்த புகார்கள் கூட அல்ல, ஒரு நகரத்தில் பதியப்பட்ட புகார் எனில் இந்தியாவின் மாநிலங்கள், தொலைதொடர்பு சேவைகளே இல்லாத மலைக்கிராமங்கள், பழங்குடியினப் பெண்கள் நிலை எல்லாம் என்ன என்னும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. 181 என்பது நாடு முழுக்கவே பெண்களுக்காக இயங்கும் ஒரே அவசர அழைப்பு எண். உங்கள் மாநிலம் மற்றும் நகரம் எதுவோ எங்கே இருந்து நீங்கள் புகார் செய்கிறீர்களோ அந்த குறிப்பிட்ட பகுதி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உங்கள் அழைப்புகள் செல்லும். எந்த உதவியானாலும், புகார்கள் எனினும், மேலும் ஏதேனும் ஆபத்துகள் என்றாலும் கூட இந்த எண்ணுக்கு அழைத்து உதவி பெறலாம். மேலும் மொபைலில் அழைப்பிற்கான பணமோ, அல்லது கட்டணமோ கூட இல்லை என்றாலும் இந்த 181 எண்ணுக்கு அழைப்புகள் செல்லும்.