புதுடெல்லி: ஒன்றிய தகவல் ஆணையம், கடந்த 3 ஆண்டுகளில் நிலுவை மேல்முறையீடு மனுக்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.ஆர்டிஐ விண்ணப்பதாரர்களுக்கு தகவல் வழங்குவதை மறுக்கும் அல்லது தாமதப்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் புகார்கள் மற்றும் மேல்முறையீடு மனுக்களை ஒன்றிய தகவல் ஆணையம் விசாரித்து வருகிறது.
இதன் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி, 2020-21ம் ஆண்டில் 19,183 மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, அதில் 17,017 மனுக்கள் முடிக்கப்பட்டு, ஆண்டு இறுதியில் 38,116 மனுக்கள் நிலுவையில் இருந்தன. இது, 2022-23ல் 19,233 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22ல் 28,793 மனுக்களுக்கும், 2022-23ல் 29,210 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. அதேசமயம், 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டிய ஆணையத்தில் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. தலைமை தகவல் ஆணையர் உட்பட மீதமுள்ள 6 பேர் பதவிக்காலம் இந்த ஆண்டில் முடிவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.