இஸ்லாமாபாத்,: நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை மட்டுமே குறி வைத்து இந்திய ஆயுதப்படைகள் தாக்குதல் நடத்தின.
இதில் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொலைபேசியில் பேசினார். அப்போது, “ஜம்மு காஷ்மீர், சிந்து நதி நீர் ஒப்பந்தம், வர்த்தகம் மற்றும் தீவிரவாதம் உள்பட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.