டொரான்டோ: கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். டபுள்யூடிஏ 1000 தரவரிசை புள்ளிகளுக்கான நேஷனல் பேங்க் கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜெசிகா பெகுலா (30 வயது, 6வது ரேங்க்), சக வீராங்கனை அமண்டா அனிசிமோவா (22வயது, 49வது ரேங்க்) மோதினர். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய பெகுலா 1-0 என முன்னிலை பெற்றார். 2வது செட்டில் அதிரடியாக விளையாட்டி புள்ளிகளைக் குவித்த அமண்டா 6-2 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.
எனினும், 3வது செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பெகுலா 6-3, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மீண்டும் கனடா ஓபன் கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 27 நிமிடங்களுக்கு நீண்டது. நடப்பு சீசனில் பெகுலா வெல்லும் 2வது சாம்பியன் பட்டம் இது. ஏற்கனவே ஜூன் மாதம் பெர்லினில் நடந்த தொடரில் அவர் பட்டம் வென்றிருந்தார்.
பாபிரின் அசத்தல்
இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருப்லேவ் (26 வயது, 6வது ரேங்க்), ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் (25 வயது, 23வது ரேங்க்) மோதினர். அதில் பாபிரின் 6-2, 6-4 என நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 29 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இது அவரது 3வது பட்டம் என்பதுடன், முதல் முறையாக 1000 தரவரிசைப் புள்ளிகளுக்கான ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 23 ஆண்டுகளுக்கு பிறகு ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 போட்டியில் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையும் பாபிரினுக்கு கிடைத்துள்ளது.