பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளது. இங்கு கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 10ம் தேதியும், தேரோட்டம் 11ம் தேதியும் நடந்தது. நேற்று தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவடைந்தது.
தைப்பூச திருவிழாவில் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக பணம் செலுத்தினர். கடந்த மாதம் 23ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணிய நிலையில், நேற்று கோயிலில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் கோயில் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
ரொக்க பணமாக ரூ.3 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 776, தங்கம் 557 கிராம், வெள்ளி 21,235 கிராம், வெளிநாட்டு கரன்சி 1,153 ஆகியவை காணிக்கையாக கிடைத்தன. இப்பணியை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.