திருமலை: ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணின் பிறந்தநாள் பேனர் கட்டியபோது மின்சாரம் பாய்ந்து ரசிகர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநில துணை முதல்வர் மற்றும் ஜனசேனா கட்சி தலைவராக இருப்பவர் பவன்கல்யாண். இவரது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் கட்சிதொண்டர்கள் பல்வேறு இடங்களில் பேனர் கட்டி பிறந்தநாள் கொண்டாடினர். இந்நிலையில் திருப்பதி மாவட்டம் ராமச்சந்திராபுரம் அடுத்த அனுபள்ளி கிராமத்தில் துணை முதல்வர் பவன் கல்யாண் பிறந்தநாள் விழாவையொட்டி ரசிகர்கள் கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்தனர்.
இதற்காக நேற்று மாலை பிளக்ஸ் பேனர்கள் கட்டிக்கொண்டிருந்தனர். அப்போது காற்று திடீரென வீசியதில் பேனர் சாய்ந்து அங்குள்ள மின்கம்பியில் சிக்கியது. இதில் பேனரை பிடித்துக்கொண்டிருந்த பவன் கல்யாணின் ரசிகரான கோபி என்வர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் பேனரை பிடித்த மது உள்ளிட்ட 3 பேரும் தூக்கி வீசப்பட்டவர். படுகாயம் அடைந்த 3 ேபரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.