ஐதராபாத்: துணை முதல்வர் பவன் கல்யாண் குறித்து சர்ச்சை கருத்து கூறிய தெலுங்கு நடிகர் போசானி கிருஷ்ண முரளியை போலீசார் நேற்றிரவு கைது செய்ததால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு சினிமா நடிகரும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான போசானி கிருஷ்ண முரளி, கடந்த சில வாரங்களுக்கு முன் ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் குறித்தும், அவரது சமூகம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். மேலும் போசானி கிருஷ்ண முரளியின் கருத்துக்கு எதிராக ேபாராட்டங்களும் நடைபெற்று வந்தன. அதையடுத்து அவர் மீது ஒபுலவரிப்பள்ளி போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். போசானி கிருஷ்ண முரளிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு தனது ஐதராபாத் வீட்டில் இருந்த போசானி கிருஷ்ண முரளியை ஆந்திர மாநில தனிப்படை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவரை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீசார் வந்தபோது, அவர் தனக்கு உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாகவும், கைது செய்வதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் போலீசார் தரப்பில் ஏற்றுக் கொள்ளப்படவில்ைல. வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு போசானி கிருஷ்ண முரளியை போலீசார் கேட்டுக் கொண்டனர். பின்னர் அவரை போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. போசானி கிருஷ்ண முரளி மீது ஏற்கனவே பல வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.