Friday, July 19, 2024
Home » பால் பூத் உரிமை வாங்கி தருவதாக சொந்தக் கட்சிக்காரர்களிடமே பணத்தை கறந்த தாமரை நிர்வாகி பற்றி கூறுகிறார்: wiki யானந்தா

பால் பூத் உரிமை வாங்கி தருவதாக சொந்தக் கட்சிக்காரர்களிடமே பணத்தை கறந்த தாமரை நிர்வாகி பற்றி கூறுகிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘பாத்ரூம், அலமாரின்னு ரூபாய் நோட்டு சிக்கியதுல, அடுத்து நம்ம ஏரியாவுக்கு வந்துடுவாங்களோன்னு பதிவுத்துறையே அதிர்ச்சியில இருக்குதாமே..’’ என பவ்வியமா கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டம் கோணம் பாதியான பகுதியில, பத்திரம் பதியறதுக்கும், திருமணம் பதியறதுக்கும், பவர் கொடுக்குறது, பவர் வாங்குறது, உயிலுன்னு எல்லா பதிவும் நடக்குது.. இதனால ஜனங்க இந்த பதிவு ஆபிசுக்கு அதிகளவுல வந்துபோறாங்க.. அதே நேரத்துல சம்திங் வாங்குறதுக்கும் இங்க புரோக்கர்ஸ் அதிகளவு மொய்க்குறாங்களாம்.. விஜிலென்ஸ் காதுக்கு இந்த மொய்க்குற மேட்டரும், சம்திங் மேட்டரும் காத்துவாக்குல பறந்திருக்குது.. அவங்களும், திடீர்னு மூணு நாளைக்கு முன்னாடி நடத்துன ரெய்டுல, கோணம் பாதியான பதிவு ஆபிஸ்ல பாத்ரூம், அலமாரின்னு ஒரு எல்க்கு அதிகமாவே சம்திங் நோட்டுகளை பதுக்கி வெச்சிருந்திருக்காங்க.. இந்த ரெய்டுல எல்லாம் நோட்டு சிக்கிடுச்சாம்.. இந்த ரெய்டு மேட்டரால, குயின்பேட்டை மாவட்ட பதிவுத்துறையை, அடுத்து நம்ம ஏரியாவுக்கு வந்துடுவாங்களோன்னு அதிர்ச்சியில இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பால் பூத் உரிமை பெற்றுத்தருவதாக கூறி கட்சிக்காரர்களிடமே பணத்தை கறந்த தாமரை மாவட்ட நிர்வாகி மீது அடுக்கடுக்காக புகார் பறக்கிறதாமே..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘பூட்டு மாவட்ட தாமரை கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் மீது, அவரது கட்சிக்காரர்களே தலைமைக்கு புகார்களை அடுக்கி வர்றாங்களாம்.. குறிப்பாக பால் பூத் வைக்க உரிமம் வாங்கித் தருவதாகக் கூறி சில லட்சங்களை அந்த நபர் கறந்து விட்டாராம்.. பணம் வாங்கும் வரை ஆக்டிவாக இருந்த அவரது குறிப்பிட்ட செல் நம்பர், பணம் வந்து சேர்ந்ததும் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டதாம்.. தனது ெசாந்த கட்சிக்காரர்களிடமே இதுபோல பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறாராம்.. இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த தாமரைகள் பலர், தங்களுக்கு தெரிந்த முக்கிய நபர்களை எல்லாம் வைத்து பஞ்சாயத்து பேசினாங்களாம்.. ஆனால், கொடுத்த பணத்தை மட்டும் திருப்பி வாங்க முடியவில்லையாம்.. கட்சியின் மாநில நிர்வாகிகள் தலையிட்டும் பணம் கிடைக்காததால் நொந்து போன தாமரை கட்சிக்காரர் ஒருவர், வேறு வழியின்றி மாவட்ட முக்கிய நிர்வாகி மீது போலீசில் புகார் அளித்துள்ளாராம்.. இதன்பேரில் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கு.. இன்னும் எத்தனை பேர் புகார் அளிக்கவுள்ளனரோ என சக மாவட்ட நிர்வாகிகள் கவலையில் இருக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதிய வழக்கு பதிவானாலே பரபரப்பாகி விடும் ‘வசூல்ராஜா’ சூப்பர் ஸ்டார் அடுத்த காவல் நிலையம் வரை பாய்கிற கதை தெரியுமா…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகர காவல்துறையில் சரவணம்பட்டி காவல் நிலையம் சமீப காலமாக ரொம்பவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ‘சூப்பர் ஸ்டார்’ பெயர் கொண்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர்தான் இதற்கு முக்கிய காரணமாம்.. இவர், விஜிலென்ஸ் விரிக்கும் வலையில் சிக்கி விடக்கூடாது என்பதில் ரொம்பவே உஷாராக இருக்கிறாராம்.. அதனால், தனக்கு வேண்டிய, ‘அழகு’ என துவங்கும் பெயர் கொண்ட ஒரு நபரை புரோக்கராக கைக்குள் வைத்துக்கொண்டு, அவர் மூலமாக பல லட்சங்களை குவித்து வருகிறாராம்.. இக்காவல் நிலையத்தில் புதிய வழக்கு ஏதேனும் பதிவானால் இவர், பரபரப்பாகி விடுகிறாராம்.. அதாவது, ‘அழகு’வுடன் கூட்டு சேர்ந்துகொண்டு, ‘யோவ்…, உன்னை கான்டக்ட் பண்ண சொல்லி இருக்கேன்…. வழக்கம்போல எவ்வளவு தேறும்ன்னு பார்த்து அமுக்கிவிடு…’ என கிரீன் சிக்னல் கொடுத்து விடுகிறாராம்.. அவ்வளவுதான்…. அடுத்த சில நிமிடங்களில் பாக்கெட் நிரம்பி விடுகிறது.. `கரன்சி கைமாறும்போது… பக்கத்துல ஏதாச்சும் சிசிடிவி கேமரா இருக்கான்னு பார்த்துக்கோ…. பின்னாடி விசாரணை… அது… இது…ன்னு ஏதாச்சும் வந்தா… நான் பொறுப்பல்ல…, ஜாக்கிரதை…’ என அலார்ட் செய்து விடுகிறாராம்.. இவர் சுழற்றும் சாட்டைக்கு ஏற்ப, ‘அழகு’ பம்பரம் அருமையாக ஆட்டம் போடுகிறதாம்.. இந்த சப்-இன்ஸ்பெக்டர், தனது எல்லையை தாண்டி, அடுத்த காவல் நிலையம் வரை பாய்கிறாராம்.. அதனால… இவருக்கு வசூல்ராஜா… சூப்பர் ஸ்டார்…ன்னு பேரு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒற்றை விரல் எச்சரிக்கை ஆறாத ரணமாவே இருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தந்தை கதர் கட்சியின் மூத்த தலைவர், சித்தப்பா, அவரது மகன் எல்லோரும் தேர்தலை சந்தித்து எம்பியாக இருந்தவர்கள். தென் மாவட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்றவரின் மகளானவர், மலராத கட்சியின் மாநில தலைவராக இருந்தாரு. மலர்ந்தே தீரும் மலர்ந்தே தீரும் என்ற கோஷத்திற்கு சொந்தக்காரரான அவர் ரெண்டு மாநிலத்தின் கவர்னராக இருந்தாரு. மதிப்போடு இருந்தவரை ராஜினாமா செய்ய வச்சி, தோத்துடுவோமுன்னு தெரிஞ்சும் போட்டியிட வச்சதாம் டெல்லி. என்றாலும் கட்சியில் கிரிமினல்கள் இருக்காங்கன்னு உண்மையை சொல்லியிருக்காரு அந்த மாஜி தலைவரு. இதனால கொதித்துப்போன டெல்லி உள்துறை மந்திரியோ, பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்தே அவமானப்படுத்திட்டாராம். இதனால அவர் சார்ந்திருக்கிற கட்சி மட்டுமல்லாது ஒட்டுமொத்த பெண் சமுதாயமே அதிர்ச்சியடைஞ்சிட்டாங்க. எவ்வளவோ அவமானங்களை சகித்துக்கொண்டு இந்த கட்சிக்காக ஊரெல்லாம் சுத்தினாங்க. மலராத கட்சியை எவ்வளவு உயர்வா நினைச்சோம். இப்படி மேடை ஏற்றி, தொலைத்துவிடுவேன் என்று ஒற்றை விரலை காட்டி எச்சரிக்கை செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. உடனடியாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியிருக்காம். இதனால டெல்லி தலைமை ஷாக்கானதோடு மட்டுமல்லாமல் யாருக்காக பெண் தலைவரை இகழ்ந்து பேசினாரோ, அந்த மாஜி போலீஸ்காரரையே போய் பார்க்க உத்தரவு போட்டுச்சாம். இதனால மாஜி போலீஸ்காரர் பெண் தலைவரை சந்தித்தாராம். என்றாலும் தென்மாவட்ட மக்களின் மனதில் ஒற்றை விரல் எச்சரிக்கை ஆறாத ரணமாகவே இருக்காம். இதற்கு தேர்தல் நேரத்தில் தகுந்த பாடத்தை கற்பிப்போமுன்னு உறுதி எடுத்திருக்காங்களாம் தென்மாவட்ட மக்கள்’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi