சென்னை: பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். அப்போது ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் பூத் அளவிலான உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு நடத்தினார். தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் முழுவீச்சில் ஆளுங்கட்சியான திமுக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், “உடன் பிறப்பே வா ” என்ற பெயரில் ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்ற பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசினார். இதில் 3 தொகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசி அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அவர்களும் மனம் விட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கருத்துக்களை தெரிவித்தனர்.
அவர்களின் கருத்துக்களை கவனமுடன் முதல்வர் கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு பல்வேறு விளக்கங்களையும் அளித்தார். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மணி நேரம் என, சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து கருத்துக்களை கேட்டார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொகுதி மக்கள் திமுக ஆட்சியை பற்றி என்ன நினைக்கிறார்கள். மக்கள் இன்னும் அரசிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்றும் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் கடந்த தேர்தலை விட வரும் சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும்.
ஒற்றுமையுடன் பணியாற்றி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி வாகை சூட உறுதி ஏற்கன வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கம் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் ஓரணி தமிழ்நாடு முன்னெடுப்பில் பூத் அளவிலான உறுப்பினர் சேர்க்கை குறித்தும் கேட்டறிந்தார். கையில் டேட்டாவை வைத்து கொண்டு ஒன்றிய செயலாளர்களிடம் ஒவ்வொரு வாக்குசாவடியிலும் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் வீடு, வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து அரசின் செயல்பாடு, மக்கள் நலத்திட்டங்களை எடுத்து கூற வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.