பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகர ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் மூர்த்தி, சென்னை தென்னக ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர், தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு திருவாரூர் – காரைக்குடி பாசஞ்சர் ரயில் காலை 6. 20 மணிக்கு திருவாரூரிலிருந்து புறப்பட்டு காலை 7.58 மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வந்து காரைக்குடிக்கு காலை 9.35 மணிக்கு சென்றடைகிறது. திருவாரூர் – பட்டுக்கோட்டை டெமு ரயில் திருவாரூரில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு காலை 10.05 மணிக்கு வருகிறது. மீண்டும் மாலை 5.15 மணிக்கு பட்டுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு டெமு ரயில் திருவாரூருக்கு மாலை 6.55 மணிக்கும், மாலை 6 மணிக்கு காரைக்குடியிலிருந்து புறப்படும் பாசஞ்சர் ரயில் இரவு 7.15 மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வந்து திருவாரூர் சென்றடைகிறது.
இது ரயில் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பபை பெற்றுள்ளது. இந்நிலையில் காலையிலிருந்து பிற்பகல் வரை பட்டுகோட்டை மார்க்கமாக காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை பாசஞ்சர் ரயில் ஏதும் இல்லாததால் மாணவர்கள், அலுவலகம் செல்லும் அலுவலர்கள், வர்த்தகர்கள் மற்றும் இதர ரயில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுபோல் மறு மார்க்கமாக பிற்பகல் முதல் இரவு வரை திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை மார்க்கமாக காரைக்குடி வரை பாசஞ்சர் ரயில் ஏதுமில்லை. ரயில் பயணிகள் நலன்கருதி காரைக்குடியிலிருந்து மயிலாடுதுறை வரை மற்றும் மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி வரை பட்டுக்கோட்டை மார்க்கமாக காலை, மாலை நேரத்திற்கு பாசஞ்சர் ரயில் விடவேண்டும் என பட்டுகோட்டை நகர ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.
இந்த கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில் அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பேரளம் மற்றும் இடையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.