பட்டுப்புடவைகள் பெரும்பாலான பெண்கள் பொக்கிஷமாக கருதுகிறார்கள். ஒவ்வொரு பட்டுப்புடவையும் ஒவ்வொரு முக்கிய தருணத்துக்காக வாங்கியது என்பதால் அவை பெண்களின் உணர்வுகளுடன் நெருக்க மானவை. அதே நேரம் பட்டுப் புடவைகள் விலையாலும் உயர்ந்தவைதான். அந்த பட்டுப் புடவைகளை பாதுகாப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்.பட்டுப்புடவை வெளிப் பார்வைக்கு சுத்தமாக தெரிந்தாலும், அதில் கண்ணுக்குத் தெரியாத கறைகள் அல்லது, அழுக்குகள் இருக்கலாம். அவை காலப் போக்கில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் பட்டுப் புடவைகளை சுத்தம் செய்ய டிரைகிளீனிங் சிறந்த வழியாகும்.பட்டுப் புடவையை மஸ்லின் துணியால் போர்த்தி பாதுகாக்கலாம். மஸ்லின் ஒரு மென்மையான துணியாகும். இது பட்டுப் புடவையை தூசி, வெளிச் சத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஆனால் பட்டுப் புடவைகளை சேர்த்து வைக்க பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். காரணம் அவை ஈரப்பதத்தை தக்கவைத்து பூஞ்சைக்களை ஏற்படுத்தும். பட்டுப்புடவைகளை குளுமையான, உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கவும். அதிக ஈரப்பதம் அல்லது நேரடி சூரிய வெளிச்சம் படும் பகுதிகளை தவிர்க்கவும். அதிக வெப்பமும், ஈரமும் பட்டு இழைகளை வலுவிழிக்க செய்து, நிறங்களை மங்கச் செய்யும்.பட்டுப் புடவைகளை நீண்ட காலத்துக்கு தொங்க விடுவதை தவிர்க்கவும். இவ்வாறு தொங்குவது மடிப்புகளை தடுக்கும். அதே வேளையில் நீண்ட காலம் பாதுகாப்பதற்கு ஏற்றது அல்ல. புடவையை நேர்த்தியாக மடித்து தட்டையாக வைக்கவும்.
சில மாதங்களுக்கு ஒரு முறை பட்டுப் புடவைகளை விரித்து மீண்டும் மடியுங்கள். இது நிரந்தர மடிப்புகளை உருவாவதை தடுக்கிறது. மீண்டும் மடிக்கும்போது துணியின் குறிபிட்ட பகுதிகளில் அழுத்தத்தைத் தவிர்க்க மடிப்பு கோடுகளை மாற்றவும்.அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிலிக்கான் ஜெல் பேக்குகளை பட்டுப்புடவைகள் உள்ள இடத்தில் வைக்கவும். இது பட்டுப்புடவையை ஒட்டிய பகுதியை வறண்ட நிலையில் வைத்திருக்க உதவுகிறது. பட்டுப்புடவைகளில் பூஞ்சைக் காளான் வளர்ச்சியை தடுக்கிறது.அந்துப் பூச்சிகள் உங்கள் பட்டுப்புடவைகளில் கடுமையான வாசனையை ஏற்படுத்துவதோடு துணியையும் சேதப்படுத்தலாம். அதற்கு பதிலாக, பூச்சிகளை தடுக்க காய்ந்த வேப்பிலைகள், லாவண்டர் சாசேக்கள் போன்ற இயற்கை விரட்டிகளை பயன்படுத்தவும்.உங்கள் பட்டுப்புடவைகளை மர அலமாரியில் சேமித்து வைத்திருந்தால், அவை மரத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பட்டுத் துணியில் கரை அல்லது சேதத்தை உண்டாக்கும் எண்ணெய்களை மரம் வெளியிடலாம். அமிலம் இல்லாத ‘டிஷ்யூ’ காகிதத்தை பயன்படுத்தவும். அவற்றை மடிப்புகளுக்கு இடையில் வைக்கவும். இது மடிப்பு தோற்றத்தை தடுக்க உதவுகிறது. மடிப்பதால் ஏற்படக் கூடிய சேதத்தில் இருந்து துணியை பாதுகாக்கிறது.பட்டுப் புடவையில் நேரடியாக வாசனைத் திரவியங்கள் அல்லது பிற ரசாயனங்கள் தெளிக்க வேண்டாம். அவை கறைகளை ஏற்படுத்தும். காலப் போக்கில் துணியைப் பலவீனப்படுத்தும். பட்டுப் புடவையை அணிவதற்கு முன்பு மட்டும் வாசனை திரவியங்களை பயன்படுத்துங்கள். நீங்கள் பாதுகாத்து வைத்திருக்கும் பட்டுப்புடவைகளில் கறை, அச்சு அல்லது பூச்சிகள் போன்ற சேதத்தின் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என அவ்வப்போது பரிசோதிக்கவும். முன் கூட்டியே கண்டுபிடித்தால் பாதிப்பை தவிர்க்கலாம்.
– அ.ப. ஜெயபால்.