சென்னை: சட்டத்துறை சார்பில் ரூ.76 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மற்றும் விடுதி கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, நீதிமன்ற கட்டடங்கள் மற்றும் அரசு சட்ட கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, புதிதாக பல்வேறு இடங்களில் நீதிமன்ற கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு சட்ட கல்லூரி நூலகங்களுக்கு ரூ.3.50 கோடி செலவில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. காரைக்குடியில் 2022-23ம் கல்வியாண்டு முதல் புதிய அரசு சட்ட கல்லூரி தொடங்கப்பட்டு, அந்த கல்லூரிக்கான சொந்த கட்டடத்திற்கு ரூ.100.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் வழக்கறிஞர் நலத்திட்ட உதவி ரூ.7.50 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இதுதவிர, “வழக்காடுதல் கலை” பயிலரங்கம் கட்டுமானப் பணிகள் ரூ.32.25 லட்சம் செலவில் நடைபெற்று வருவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், குதக்கோட்டை கிராமத்தில் 1,76,549 சதுர அடி பரப்பளவில் ரூ.76 கோடியே 60 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு சட்ட கல்லூரிக்கான புதிய கட்டடம் மற்றும் விடுதி கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, இந்த புதிய கட்டடமானது, 26 வகுப்பறைகள், கருத்தரங்குக் கூடம், காணொளி காட்சி அறை, உள்விளையாட்டு அரங்கம், சர்வதேச தரத்தில் மாதிரி நீதிமன்ற அரங்கம், நிர்வாகத் தொகுதிக் கட்டடங்கள், அதிவேக இணைய வசதிகளுடன் கூடிய கம்பியில்லா மண்டலம் அடங்கிய நூலகக் கட்டிடங்கள், டால்பி டிஜிட்டல் ஒலிப்பெருக்கியுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கலையரங்கம், விடுதி காப்பாளர் அறை, 250 மாணவியர்கள் தங்கும் வசதி கொண்ட விடுதிக் கட்டிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
அதேபோல் 2022-2023ம் ஆண்டிற்கான சட்டத்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தப்படி, திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூரில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி வளாகத்தில் ரூ.1 கோடியே 57 லட்சத்து 70 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டுத் திடலையும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர், சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.