தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாக மதியம், மாலை, இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகின்றது. 18ம் தேதி 2 மி.மீ மழையும், 19ம் தேதி 55மி.மீ, 20ம்தேதி 19 மி.மீ, 21ம் தேதி 17மி.மீ.,மழை என 4நாட்களில் 112 மி.மீ., மழை பெய்துள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பருவமழை பெய்து வருவதால் நிலக்கடலை, ராகி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையால் தேன்கனிக்கோட்டை பட்டாளம் ஏரிக்கு உச்சப்பள்ளி, அர்த்தகூர், தேன்கனிக்கோட்டை நகர் பகுதியில் இருந்து செல்லும் மழை நீரால் ஏரியின் முழு கொள்ளவு எட்டும் நிலையில் உள்ளது. ஏரியில் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்தும், உபரிநீர் செல்லும் பகுதியில் சேதமடைந்து கற்கள் பெயர்ந்துள்ளதால் ஏரி முழு கொள்ளவு எட்டினால் உபரிநீர் செல்லும் பகுதி கரை உடையும் அபாய நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த 14வது வார்டு கவுன்சிலர் பிரேமாசேகர், அப்பகுதி மக்கள் சார்பாக தேன்கனிக்கோட்டை தாசில்தார், செயல் அலுவலரிடம் மனு அளித்து உடைப்பு ஏற்பட்டுள்ள உபரிநீர் செல்லும் பகுதியை சீர்செய்ய வேண்டும், ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். உபரிநீர் பகுதியில் உடைப்பு ஏற்பட்டால் வெள்ளநீர் பட்டா நிலங்களில் சென்று பயிர்கள் சேதடையும் நிலை உள்ளது. வெள்ளம் அருகில் உள்ள திம்மசந்திரம் ஏரிக்கு செல்வதால் அந்த ஏரியின் கரையும் உடையும் அபாயம் உள்ளதால் உபரிநீர் செல்லும் பகுதியில் மனல் மூட்டைகள் வைத்து பாதுகாக்க வேண்டும் என மனுவில் கேரிக்கை விடுத்துள்ளார். மனுவை பெற்றுகொண்ட அதிகாரிகள் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.