பள்ளிபாளையம், நவ.8: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து இறையமங்கலம் செல்லும் வழியில் உள்ள பட்லூரில், அறநிலையத்துறைக்கு சொந்தமான அஞ்சலேந்தி பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் பிற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு மானியமாக பல ஏக்கர் நிலம் இருந்தும், அதன் மூலம் கோயில் பூஜைக்கான வருவாய் ஏதும் தரப்படுவதில்லை. இதையடுத்து கோயில் நிலத்தை அடையாளம் கண்டு, அதன் ஆக்கிரமிப்புகளை மீட்கும் நடவடிக்கையில், அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பட்லூர் பேருந்து நிறுத்தம் அருகே, அஞ்சலேந்தி பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக 2,355 சதுர அடி நிலம் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்த நிலத்தில் மாட்டு கொட்டகை போட்டு, தென்னை, வாழைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தை ஒப்படைக்கும்படி ஆக்கிரமிப்பாளருக்கு அறநிலையத்துறை கடிதம் வழங்கியது. ஆனால் அவர்கள் நிலத்தை ஒப்படைக்கப்படவில்லை. இதையடுத்து நாமக்கல் மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் சுவாமிநாதன் தலைமையில், பெருமாள் மலைக்கோயில் செயல் அலுவலர் கீதா, அறநிலையத்துறை ஆய்வாளர்கள் நவீன்ராஜ், வடிவுக்கரசி, மொளசி எஸ்ஐ வெற்றிவேல் மற்றும் போலீசார் நேற்று அங்கு வந்தனர். கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றிய அதிகாரிகள், நிலத்தை கையகப்படுத்தினர். மேலும், கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.