சென்னை: தமிழகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் மருத்துவப் பணியிடங்கள் உருவாக்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் ராஜமூர்த்தி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் இவ்வியக்க கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் நலப்பணிகள் இணை இயக்குநர், மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் (குடும்ப நலம்) மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் (காசநோய் மற்றும் தொழுநோய்) முதன்மை குடிமை மருத்துவர் மற்றும் முதுநிலை குடிமை மருத்துவர்கள் சொந்த வேலை காரணமாக ஈட்டிய விடுப்பு முன் அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தற்சமயம் அதிகமாக வரப் பெறுகின்றன.
தற்சமயம் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக விடுப்பு கோரும் மருத்துவர்களுக்கு விடுப்பு வழங்கினால், பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சிகிச்சை வழங்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே மருத்துவர்கள் பற்றாக்குறை சீரடையும் வரை ஈட்டிய விடுப்பு கோரும் விண்ணப்பங்களை இவ்வியக்கத்திற்கு பரிந்துரைத்து அனுப்புவதை தவிர்க்குமாறும், தங்கள் அளவிலேயே விடுப்பு விண்ணப்பங்களை நிராகரிக்குமாறும் அனைத்து மாவட்ட நலப்பணிகள் இயக்குநர்கள் இதன் வழி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் உடனடியாக இந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல மருத்துவப் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.