Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் போது பெரிய எழுத்துகளிலும் தெளிவாகவும் எழுத வேண்டும்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைக்கும்போது அதனை தெளிவாகவும், பெரிய எழுத்துகளிலும் எழுத வேண்டும் என்று மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கை: மருந்து பரிந்துரைச் சீட்டுகளை தெளிவாக எழுதுவது தொடர்பான பாடத்தை மருத்துவப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது அவசியம் என்று பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. பாதுகாக்கப்பட வேண்டிய மருத்துவ ஆவணங்கள் தெளிவாக இருத்தல் வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. அந்த உத்தரவை கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவ ஆணையம் சில முக்கிய முடிவுகளை முன்னெடுத்தது.

அதன்படி ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் மருந்து சீட்டு நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கென சிறப்பு துணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அந்த குழுவானது நோயாளிகளுக்கு மருத்துவர்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கும் மருந்து பரிந்துரைகள் தெளிவாக உள்ளதா என்பதை மதிப்பிடும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். துணைக் குழு முன்னெடுக்கும் இந்த பணிகள் அனைத்தையும் ஆவணப்படுத்துவதுடன், அவற்றை தேசிய மருத்துவ ஆணையம் கேட்கும்போது சமர்பிக்கும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பெரிய எழுத்துகளில் புரியும்படி மூலப்பெயருடன் கூடிய மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது கட்டாயம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.