நன்றி குங்குமம் தோழி
‘‘பலகீனம், திறமை, வலிமை, செயலாற்றும் தன்மை, புத்திசாலித்தனம், துன்பம், நெருக்கடி என எல்லாவற்றையும் சமாளிக்கும் திறமையை சொல்லித்தரும் ஒரு ஆற்றல் கருவிதான் குத்துச்சண்டை’’ என்கிறார் சென்னை, தண்டையார் பேட்டையில் வசிக்கும் அக்ஷயா. கடந்த மாதம் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான இளையோர் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று பல்வேறு பாராட்டுகளைப் பெற்றது மட்டுமில்லாமல், உத்தரப் பிரதேசத்தில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றிருக்கிறார்.
‘‘இந்த வருடம்தான் +2 தேர்வு எழுதி இருக்கிறேன். சின்ன வயசில் இருந்தே அப்பாவிற்கு உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விருப்பம். அதனால் தினமும் நடைப்பயிற்சிக்கு செல்வார். அவர் போகும் போது என்னை உடன் நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்வார். ஆனால் அவரின் பணியின் நேரம் மாற்றமானதால் அவரால் காலை நேரத்தில் நடைப்பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. அப்பாவிற்கு காலை நேரத்தில் வேலைக்குப் போக வேண்டும் என்பதால், என்னால் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனது.
அப்போது நான் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என் அம்மா, அப்பாவுடன் நடைப்பயிற்சி போக முடியவில்லை என்றால் என்ன, ஏதாவது விளையாட்டு சார்ந்து போட்டிகளில் கலந்து கொள்ளலாமே என்றார். அப்போது எனக்கு உடனே ஞாபகம் வந்தது வேலுநாச்சியார் மற்றும் ஜான்சிராணி லட்சுமிபாய் இருவரையும்தான். இவர்கள் போன்ற வீரமிக்கப் பெண்களுக்கு நிகரான குத்துச்சண்டையை தேர்வு செய்ய முடிவெடுத்தேன்.
என் விருப் பத்தை புரிந்து கொண்டு என் பெற்றோரும் என்னை அதற்கான பயிற்சியில் சேர்த்து விட்டார்கள். அப்போது ஒருநாள் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்த போது குத்துச்சண்டைக்காக பத்ம விருது பெற்ற இந்தியப் பெண்மணி மேரிகோமின் ஆட்டத்திறமையையும், புகைப் படங்களையும் இணையம் மூலமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரைப்போல் பெரிய அளவில் சாதனை படைக்க முடியவில்லை என்றாலும், நம் நாட்டிற்காக சிறிய அளவில் என்னுடைய பங்களிப்பு இந்நாட்டிற்கும், நம் தமிழ் மண்ணிற்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உருவாகியது. பொதுவாக மூன்று நிமிடங்களைக் கொண்டு, சராசரி 3 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறும்.
சுற்றுகளின் இடைவெளியில் ஒரு நிமிடம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அந்த ஒரு நிமிடத்தில் எதிராளி எது போன்ற பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்று கவனிக்க வேண்டும். மேலும் முதல் சுற்றிலேயே நம் திறமையை எதிராளிக்கு காண்பித்து விடக்கூடாது. மனம், உடல் சோர்வு ஏற்படாமல், பொறுமையாகவும், நிதானமாகவும், அதே நேரத்தில் அறிவையும் செயல்படுத்த வேண்டும். இதனை பின்பற்றினால் வெற்றி என்பது எளிதாகி விடும்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க முக்கியமாக, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போது பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அந்த நேரத்தில் அம்மா வீட்டில் இருக்கும் தங்க நகையினை அடகு வைத்து பயணத்திற்கான ஏற்பாடு செய்வார்கள். அப்போது அம்மா, ‘கழுத்தில் அணியும் தங்கம் நமக்கான சொத்து. ஆனால் நீ குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்றால், நம் மாநிலத்தின் மதிப்பும், மரியாதையும் உயரும்’ என்பார். அந்த ஊக்கம்தான் கடந்தாண்டு பிப்ரவரி மாதம், 18ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற தென்னிந்தியா டேலன்ட் ஹன்ட், தேசிய அளவிலான 63-66 எடை பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றேன்.
அதே ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான 66-70 கிலோ எடைபிரிவில், தங்கப்பதக்கம் வென்றேன். பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் மற்றும் குடியரசு தினம் முன்னிட்டு இவ்வாண்டு ஜனவரி மாதம் மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்றேன். பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தேன். இதுவரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும், 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களும் பெற்றுள்ளேன்’’ என்கிறார் அக்ஷயா.
தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்