டெல்லி: பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என பதஞ்சலி நிறுவனம் உத்தரவாதம் அளித்த நிலையில், உத்தரவாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு முடித்து வைத்து உத்தரவிட்டது.
கடந்த மார்ச் 21ம் தேதி, பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, தனது தவறான விளம்பரங்களுக்கு வருத்தம் தெரிவித்தும், மன்னிப்புக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான விளம்பரங்கள் வெளியிடப்படாது என்றும் பாலகிருஷ்ணா தெளிவுபடுத்தினார். இதையடுத்து ராம்தேவ் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.
பதஞ்சலி நிறுவனம் தனது விளம்பரங்களில் அலோபதிக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விளம்பரங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், பதஞ்சலி இந்த உத்தரவை மீறியது. இதனால் ஆத்திரமடைந்த நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்குமாறு எச்சரித்தது. மேலும், தவறான விளம்பரங்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என நீதிபதி அமானுல்லா கடுமையாக எச்சரித்துள்ளார்.
பதஞ்சலி யோகாவின் உதவியுடன் நீரிழிவு மற்றும் ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்துவதாகக் கூறுகிறது. மேலும், பதஞ்சலி தனது நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தினால் சில நோய்கள் குணமாகும் என்று கூறியது. மேலும், அலோபதி சிகிச்சை முறை குறித்து தவறான தகவல் பரவியதால் இந்திய மருத்துவ சங்கம் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தது.
இந்நிலையில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என பதஞ்சலி நிறுவனம் உத்தரவாதம் அளித்த நிலையில், உத்தரவாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு முடித்து வைத்து உத்தரவிட்டது. பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் இந்த வழக்கிற்காக 3 முறை நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.