சிவகாசி… பேரைக்கேட்டாலே ச்சும்மா… அதிருதில்ல. அடுத்த வாரம் தீபாவளி. இந்த நேரத்தில் சிவகாசி பற்றி விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. பட்டாசு தயாரிப்பு வேலைகள் முடிந்து இப்போது விற்பனை மும்முரமாக இருக்கும். இந்த ஊருக்கும் பட்டாசுக்கும் அப்படி என்னதான் சம்பந்தம்?இந்தக் கேள்விக்கு ஒரே பதில் வெயில்தான். ஆம் இங்கு நிலவும் வெப்பநிலை பட்டாசு தயாரிப்புக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். பட்டாசு பேப்பருக்குள் மருந்தைத் திணிக்கும்போதே தீப்பிடிக்கும் அளவுக்கு சிவகாசியின் வெப்பநிலை கடுமையாக இருக்கும். இங்கு அச்சுத்தொழில் சிறந்து விளங்குவதற்கும் இதே காரணம்தான். சரி, வெயிலுக்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது. வெயில் கொளுத்தி எடுக்கும் இந்தக் கந்தக பூமியில் குளு குளு சீதோஷ்ண நிலையில் வெள்ளரி சாகுபடி செய்து வருகிறார் சிவப்பிரகாசம் என்ற விவசாயி.
சிவகாசிக்கு அருகில் திருத்தங்கல் பகுதியில் இவர் அமைத்துள்ள பசுமைக்குடிலில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வெள்ளரியில் நல்ல விளைச்சல் எடுக்கிறார். அதனை முறையாக மார்க்கெட்டிங் செய்து சிறப்பான லாபத்தையும் பார்த்து விடுகிறார். சுட்டெரிக்கும் சிவகாசி வெயிலில் பயணித்து சிவப்பிரகாசத்தின் பசுமைக்குடிலை அடைந்தோம். அங்கு பசுமையாக காட்சியளிக்கும் வெள்ளரிச்செடிகளுக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டவாறே நம்மிடம் பேச ஆரம்பித்தார். “ வெளிநாட்டில் வேலை செய்தேன். ஊருக்கு சென்று ஏதாவது தொழில் செய்யலாம் என நினைத்து திருத்தங்கலுக்கு வந்தேன். பழ ஜூஸ் தயாரிப்புக்காக பப்பாளி சாகுபடி செய்தேன். அப்போது சில மாற்றுப்பயிர் செய்யலாமே என முடிவெடுத்து சில பயிர்களை சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். அதன்படி கத்தரி, தக்காளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தேன். கடந்த 2017ல் பசுமைக்குடில் விவசாயம் குறித்து அறிந்து அதை நாமும் செய்யலாமே என நம்பிக்கையுடன் இறங்கினேன். இந்தப் பகுதியில் தண்ணீர் வசதி குறைவாக இருக்கும்.
எனது நிலத்தில் இருக்கும் நிலத்தடி நீர் கொஞ்சம் நன்றாக இருக்கும். ஆனால் இந்தப் பகுதி முழுவதுமே களிமண்ணாக இருக்கும். இது சாகுபடிக்கு சரிப்பட்டு வராது. இதனால் தென்னை நார்க்கழிவுத்தூளை நிலத்தில் பரப்பி அதில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். அதாவது 2 ஏக்கர் நிலத்தில் பசுமைக்குடில் அமைத்து, அதில் முழுக்க முழுக்க சொட்டுநீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தினேன். தரைப்பகுதியில் தென்னைநார்க் கழிவுத்தூளை இட்டு சாகுபடி செய்தேன். நல்ல விளைச்சல். நல்ல லாபம். சாதாரணமாக 8 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யும் மகசூலை, பசுமைக்குடில் அமைத்த ஒரு ஏக்கரில் மகசூல் எடுக்கலாம். மழை நேரடியாக தாக்காது என்பதால் அழுகல் நோய் வராது. சீதோஷ்ண நிலை தோதாக இருக்கும். வெளிச்சம் சரியான விகிதத்தில் கிடைக்கும். குறிப்பாக வேஸ்டேஜ் அதிகம் இருக்காது. திறந்த வெளியில் சாகுபடி செய்யும்போது 40 சதவீதம் வரை மகசூலில் பாதிப்பு இருக்கும். பசுமைக்குடில் விவசாயத்தில் அதிகபட்சம் 5 சதவீதம் மட்டுமே சேதமாகும். இதுபோன்ற காரணங்கள் நான் தொடர்ந்து வெள்ளரி சாகுபடி செய்ய ஊக்கம் தருகின்றன’’ என பசுமைக்குடில் குறித்த சாதகங்களை அடுக்கிய சிவப்பிரகாசத்திடம் வெள்ளரி சாகுபடி விபரம் குறித்து கேட்டோம்.
“ தேங்காய் நார்க்கழிவுக்கு பதிலாக இப்போது செம்மண்ணை வாங்கி வந்து தரைப்பகுதியில் நிரப்பி இருக்கிறோம். இதில் 3 முறை 5 கலப்பை கொண்டு நன்றாக உழவு செய்து, 4வது முறையாக ரொட்டோவேட்டர் கொண்டு உழுவோம். கடைசி உழவின்போது தொழுவுரம் இட்டு, 4 அடிக்கு ஒன்று அளவில் மேட்டுப்பாத்தி அமைப்போம். அந்த மேட்டுப்பாத்தியில் ஒரு அடி இடைவெளியில் வெள்ளரி நாற்றுகளை நடுவோம். நடவுக்குத் தேவையான நாற்றுகளை நாங்களே குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்வோம். 10 நாள் ஆன நாற்றுகளைப் பிடுங்கி, மேட்டுப்பாத்தியில் பாசனம் செய்து நடுவோம். ஒருநாள் கழித்து உயிர்த்தண்ணீர் விடுவோம். அதன்பிறகு தினமும் பாசனம் செய்வோம். சொட்டுநீர்ப்பாசனம் என்பதால் நீர் சிக்கனமாக விடப்படும்.
பசுமைக்குடில் விவசாயம் அதிக ரிஸ்க் கொண்டதாக இருக்கும். இதில் தினந்தோறும் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். என்னைப் பார்த்து இந்த ஊரில் பசுமைக்குடில் அமைத்தவர்கள் எல்லாம் இப்போது அதை பராமரிக்க முடியாமல் தவிக்கிறார்கள். இதில் அதிக களை வரும். அதை உடனுக்குடன் அகற்ற வேண்டியிருக்கும். வெள்ளரியின் வேர்கள் மிக மெல்லியதாக இருக்கும். களை வளர்ந்தால் செடி சேதமாகும். இதில் பூச்சி, பூஞ்சான நோய்த்தாக்கம் வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக நாங்கள் மெத்திலோமைசிஸ், பெவரியா பேசியானா போன்றவற்றை வாரம் ஒருமுறை இடுவோம். கான்பிடார், ரெடோமில் கோல்டு, அமிஸ்டார் டாப் போன்றவற்றையும் இட்டு வருகிறோம்.
நடவு செய்த 11வது நாளில் இருந்து தினமும் பொட்டாசியம் நைட்ரேட், மோனோ அம்மோனியம் பாஸ்பேட், மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ், மோனோ பொட்டாசியம் பாஸ்பேட் ஆகியவற்றை சொட்டுநீர் வழியாக கொடுப்போம். இந்த மருந்துகள் நீரில் நன்றாக கரையும். செடிகளும் உடனடியாக எடுத்துக்கொண்டு வளர்ச்சி அடையும். 20, 25வது நாளில் செடிகளில் பூக்கள் வைக்கும். 35வது நாளில் இருந்து மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். அதில் இருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை மேற்கொள்ளலாம். ஆரம்பத்தில் ஒரு அறுவடையில் 200 கிலோ மகசூல் கிடைக்கும். தொடர்ந்து 500 கிலோ, 1000 கிலோ என மகசூல் அதிகரிக்கும். 42வது நாளில் ஆயிரம் கிலோ தாராளமாக கிடைக்கும். இதையடுத்து 1500 கிலோ என மகசூல் அதிகரிக்கும். 80, 90வது நாளில் மகசூல் குறைய ஆரம்பிக்கும். வெள்ளரி பொதுவாக 100 முதல் 120 நாள் வயதுடைய பயிர். இதில் மொத்தமாக 30 முதல் 60 டன் வரை மகசூல் கிடைக்கும். சராசரியாக 40 டன் மகசூல் கிடைக்கும்.
அறுவடை செய்த வெள்ளரிக்காய்களை பேக்கிங் செய்து ஏஜென்டுகள் மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைப்போம். காய்களுக்கு கிலோ ரூ.20 முதல் 40 வரை விலை கிடைக்கும். சராசரியாக ரூ.30 விலையாக கிடைக்கும். இதன்மூலம் ரூ.12 லட்சம் வருமானம் கிடைக்கிறது. விதை, நடவு, உரம், மருந்து, பராமரிப்பு, அறுவடை, விற்பனைக்கு அனுப்புதல் என ரூ.7.5 லட்சம் வரை செலவாகும். இதுபோக ரூ.4.5 லட்சம் லாபம் கிடைக்கும். பசுமைக்குடில் விவசாயம் மிகுதியான செலவு கொண்டது. இதை ஒரு ஏக்கரில் அமைக்கவே ரூ.60 லட்சம் வரை செலவாகும். அதற்கு அரசு மானியமாக ரூ.16 லட்சம் கிடைக்கும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.நான் ஒரு ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்யும்போது மற்ற ஒரு ஏக்கரில் தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகளை சாகுபடி செய்வேன். வெள்ளரி சாகுபடி முடிந்ததும் வேறு காய்களை சாகுபடி செய்வேன். ஆனால் வருடம் முழுக்க வெள்ளரிக்காய்கள் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வேன். இதனால் வெள்ளரி மூலம் தொடர்ச்சியான வருமானம் கிடைக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
சிவப்பிரகாசம் – 90031 14588