சென்னை: பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் நேற்று அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டில் 10, 12ம் வகுப்புக்கு நடைபெற உள்ள பொதுத்தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தையும், மாணவர்கள் சராசரி மதிப்பெண்களையும் அதிகரிக்க தேவையான செயல் திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகும். தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இதன்மூலம் தேர்ச்சி, சராசரி மதிப்பெண்கள் ஆகியவற்றை அதிகரிப்பதற்கான செயல் திட்டங்களை வகுக்க இயலும். இது சார்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதில் மாவட்ட ஆட்சியரையும் பங்கேற்க அழைப்பு விடுக்கலாம்.
இந்த கூட்டத்துக்கு முன்பாக மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான தேர்ச்சி அறிக்கைகள் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது அவசியம். பொதுத்தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க என்னென்ன செயல் திட்டங்கள் உள்ளன என்பதை தலைமை ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்டறிந்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.