கராச்சி: பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயில் கடத்தப்பட்ட இடத்தை பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேரில் ஆய்வு செய்தார். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தனிநாடு தொடர்பாக பல ஆண்டுகளாகவே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு 440 பயணிகளுடன் குடலார் மற்றும் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்று கொண்டு இருந்த ரயிலை சுமார் 100க்கும் மேற்பட்ட பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு வழிமறித்து கடத்தியது.
இதையடுத்து ரயிலையும், பயணிகளையும் மீட்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் இறங்கியது. அதனால் ரயிலில் சிக்கிய அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டனர். 33 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் , 21 பயணிகளும் 4 பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரயில் கடத்தல் நடந்த பலுசிஸ்தான் மாகாணத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அவருடன் துணை பிரதமர் முகம்மது இஷாக் தார், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அதாவுல்லா தாரார், திட்டமிடல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அஹ்சன் இக்பால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் நவாப்சாதா மிர் காலித் மக்சி மற்றும் பலர் சென்றனர். அந்த பகுதியை பார்வையிட்ட பின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில்,’இதை யார் செய்தாலும், நான் அதை மிகத் தெளிவாகச் சொல்கிறேன், அவர்கள் வேட்டையாடப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். ஜாபர் எக்ஸ்பிரஸ் கடத்தல் சம்பவம் அனைத்து விதிகளை மாற்றுகிறது என்பதையும் நான் கூறுகிறேன்’ என்றார்.