மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று போதிய பயணிகள் இல்லாததால் 3 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், நேற்று பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருந்தது. அதிலும் நேற்று பிற்பகலில் இருந்து, பயணிகள் கூட்டம் இல்லாமல், சென்னை உள்நாட்டு விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் நேற்று மாலை 4.5 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மாலை 5 மணிக்கு கோவை சென்றடையும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், கோவையிலிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.45 மணிக்கு சென்னை வந்து சேரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல், சென்னையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, இரவு 7 மணிக்கு டெல்லி சென்றடையும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த குறைந்த அளவு பயணிகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் பயண டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.