சேலம்: சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் ஏசி வேலை செய்யாததால், ஜோலார்பேட்டை-சேலத்திற்கு இடையே ரயில் சென்றபோது அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் பயணிகள் நிறுத்தினர். தண்டவாளத்தில் இறங்கி போராடிய பயணிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் (12695), தினமும் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியே இயக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ் நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது. அந்த ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில், ஏசி சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. அரக்கோணத்தை ரயில் கடந்தபோது, 20க்கும் மேற்பட்ட பயணிகள், டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், ஆன்லைன் மூலமும் ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் கூறியுள்ளனர்.
இதையடுத்து மாலை 6.28 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்ததும், ஏசி மெக்கானிக் வந்து பார்த்துள்ளார். இதனால் 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுள்ளது. ஆனாலும், ஏசி சரியாகாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். ஜோலார்பேட்டை-சேலம் இடையே வந்தபோது, திடீரென அந்த முதல் வகுப்பு ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்தனர். நடுவழியில் ரயில் நின்றதால் பயணிகள் கீழே இறங்கி, அருகில் செல்லும் இணை தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் அந்த ரயிலில் ரோந்து பணியில் இருந்த ஆர்பிஎப் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேலத்திற்கு சென்றதும், சரி செய்துவிடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ரயில் புறப்பட்டது. சேலத்துக்கு வந்ததும் மெக்கானிக் ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். முடியாததால் சேலம் கோட்ட இயக்கப்பிரிவு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அருகில் உள்ள இரண்டடுக்கு ஏசி பெட்டிக்கு பயணிகளை மாற்றி இருக்கை ஒதுக்கீடு செய்து கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.