இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளிலும், ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மகளிர் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து மெயில்-எக்ஸ்பிரஸ் ரயில்களில் எச்டி சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசரகால உதவி பொத்தான்கள் பொருத்தப்படவுள்ளன. இந்த முயற்சிகள், இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பான ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரயில்வே அமைச்சகத்தின் தகவலின்படி, 2021 ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுவரை 4,141 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 335 பெட்டிகள் அடங்கும். மகளிர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 1,100 எச்டி சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசரகால உதவி பொத்தான்கள் புதியதாக தயாரிக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொருத்தப்படவுள்ளன. இவை ரயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பை உறுதி செய்யும்.
ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா அமைப்பதற்கு முன்னால், தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் உள்ள 300 சிறிய ரயில் நிலையங்களில் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் பணிகள் மந்தகதியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவே இவ்வளவு தாமதம் என்றால், ரயில் பெட்டிகளில் சிசிடிவி அமைப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை நாமே கணித்து விடலாம்.
மேலும், குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் ஹைடெக் சிசிடிவி கேமராக்கள் முக்கிய ரயில் நிலையங்களில் நிறுவப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் எத்தனை ஆண்டுக்குள் அமைக்கப்படும் என்ற கேள்விக்கு அதிகாரிகளுக்கே பதில் தெரியவில்லை. கடந்த மாதத்தில், நீண்ட தூர ரயில்களின் இன்ஜின்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் குரல் பதிவு கருவிகள் பொருத்தப்படுவதாகவும், இது விபத்துகளின் போது விசாரணைகளுக்கு உதவும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் எப்போது தொடங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்துதெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு 11,000க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து ரயில் பெட்டிகளிலும் அவசர கால உதவி பொத்தான்கள் (எஸ்ஓஎஸ்) பொருத்தப்படும். அவசர காலங்களில் இந்த பொத்தானை அழுத்தினால் பாதுகாப்பு படைக்கு உடனடியாக தகவல் அனுப்பப்பட்டு உதவி வழங்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். பெட்டிகளில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் எச்.டி தரத்தில் இருக்கும். மேலும் குறைந்தது ஒரு மாதத்திற்கான பதிவுகள் சேமிக்கப்படும். ரயிலின் ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் பெண்கள் பெட்டியில் அமைக்கப்படும் அவசர கால பொத்தான்கள் மொபைல் பயன்பாட்டுடன் இணைக்கப்படும்.
இதன் மூலம் பெண்கள் அவசர காலங்களில் மொபைல் மூலமாகவும் உதவி கோர முடியும். ரயில்வே 700க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை ரயில்வே உணர்திறன் மிக்க அல்லது மிகவும் உணர்திறன் மிக்க பட்டியலில் வைத்துள்ளது. அங்கு பெண் ஆர்.பி.எப் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
* நன்மைகள்
பயணிகள் பாதுகாப்பு: சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர கால உதவி பொத்தான்கள் மூலம், குறிப்பாக மகளிர் பெட்டிகளில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 2016ல் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை சம்பவத்திற்கு பிறகு, இத்தகைய கண்காணிப்பு அமைப்புகளின் முக்கியத்துவம் மேலும் வலியுறுத்தப்பட்டது. குற்றவாளிகளை அடையாளம் காணவும், திருட்டு, கொள்ளை, சதி செயல்கள் போன்றவற்றைத் தடுக்கவும் சிசிடிவி கேமராக்கள் உதவுகின்றன.
ரயில் விபத்துகள் அல்லது குற்றச் சம்பவங்களின் போது சிசிடிவி காட்சிகள் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. உதாரணமாக, புதுடெல்லி ரயில் நிலையத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க சிசிடிவி காட்சிகள் பயன்படுத்தப்பட்டன. ஹைடெக் கேமராக்கள் மூலம் முக அடையாளம் காணுதல் மற்றும் உயர் தரமான கண்காணிப்பு சாத்தியமாகிறது. இது பயணிகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
* குறைபாடுகள்
2024 செப்டம்பர் மாத தகவலின்படி, தமிழகத்தில் உள்ள 442 ரயில் நிலையங்களில் 35 நிலையங்களில் மட்டுமே சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இது 10%க்கும் குறைவாக உள்ளது. இது பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள பெரிய இடைவெளியை காட்டுகிறது. சில ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
உதாரணமாக, ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த தாக்குதல் சம்பவத்தின்போது, ஏசி பெட்டியில் உள்ள சிசிடிவி செயல்படவில்லை என்று பயணி ஒருவர் எஎக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி பொருத்துவதற்கு அதிகளவு நிதி மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது.
2024-25 நிதியாண்டில் மீதமுள்ள நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டாலும், இதற்கு காலதாமதம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அதே போல் சிசிடிவி கேமராக்கள் மூலம் பயணிகளின் தனியுரிமை பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது. குறிப்பாக, முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளது.
இந்திய ரயில்வேயின் சிசிடிவி மற்றும் அவசரகால உதவி பொத்தான் திட்டங்கள், குறிப்பாக மகளிர் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முக்கியமான முயற்சிகளாக உள்ளன.
இவை குற்றத் தடுப்பு மற்றும் விசாரணைக்கு உதவும் முக்கிய கருவிகளாக விளங்கினாலும், முழுமையான நிறுவல், பராமரிப்பு மற்றும் தனியுரிமை கவலைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 2025ல் இந்த திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், இந்திய ரயில்வே பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்க முடியும். மேலும், ஏற்கனவே ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயலில் உள்ளதா என்பதை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.