சென்னை: சென்னையில் இருந்து லக்னோ செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று காலை 5.40 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 160 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான பணிப்பெண்கள், விமானிக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு அவசர நிலை குறித்து தகவல் தெரிவித்தார்.
மேலும், மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், லக்னோ விமானத்தை பாதுகாப்பாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் காலை 6.30 மணியளவில் தரையிறங்கியது. அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் உடல்நலம் பாதித்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத்தொடர்ந்து, காலை 7.30 மணியளவில் விமானம் மீண்டும் சென்னையில் இருந்து லக்னோவிற்கு பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.