தருமபுரி : பருத்தி கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்க்கும் குவிண்டாலுக்கு 10,000 ரூபாயும் விலை கிடைத்திட ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரூர் பகுதி பருத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அரூர், ஓரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் பரவலாக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திங்கள்கிழமைகளில் அரூர் வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெறும். 1 கிலோ பருத்தி 60 முதல் 70 ரூபாய் வரையிலும், குவிண்டாலுக்கு ரூ. 6000 முதல் ரூ. 7,000 வரையிலும் விற்பனையாகிறது.
ஆனால் விவசாயிகள் பருத்தி பயிரிட உளவு, நடவு, களை எடுப்பு , மருந்து அடிப்பது, அறுவடை என ஒரு ஏக்கருக்கு 25,000 முதல் 30,000 வரை செலவாகிறது. எனவே தற்போதைய பருத்தி விலை கட்டுப்படி ஆகவில்லை என்று பருத்தி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே ஒன்றிய அரசும் மாநில அரசும் பருத்திக்கு குறைந்த பட்சமாக பருத்தி 1 கிலோவுக்கு 100 ரூபாயும் குவிண்டாலுக்கு 10000 ரூபாயும் விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். பருத்தி பயிரிடுவதை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள அரூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசும் மாநில அரசும் செவி சாய்க்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.