Sunday, February 25, 2024
Home » கட்சி தலைமையின் ரகசிய விசாரணை பவர்புல் பெண்மணிக்கு ஆப்பாக அமைந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி தலைமையின் ரகசிய விசாரணை பவர்புல் பெண்மணிக்கு ஆப்பாக அமைந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘பச்சைக் கொடிக்கு பதிலாக தாமரைக்கொடியை காட்டி ரயில் ஓட்டத்தை தொடங்கி வைத்த கதையை சொல்லுங்க..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘முன்னாள் ஒன்றிய அமைச்சரான பொன்னானவர் கடைகோடி தொகுதியில் மீண்டும் களமிறங்க திட்டமிட்டு காய்களை நகர்த்திக்கிட்டு வர்றாரு.. அண்மையில் வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வந்தபோது வரவேற்க மிகுந்த ஆர்வம் காட்டியதோடு ரயில் நிலையத்திற்கே வந்துவிட்டாரு.. ஆனால், ரயில்வே சார்பில் தொடக்க விழாவுக்காக எந்தவிதமான ஏற்பாடுகளும், அழைப்புகளும் யாருக்குமே அனுப்பவில்லையாம்.. தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செஞ்சா அதில கதர் கட்சியின் எம்.பி., பெயர்தான் பிரதானமா இடம்பெற வேண்டும் என்பதாலோ என்னவோ அழைப்பிதழ் ஏதும் அச்சடிக்கப்படாமலேயே தொடக்க விழா நடந்து முடிஞ்சிருக்கு.. பச்சைக்கொடி காட்டுவதற்கு பதிலாக தாமரை கட்சி கொடியை காட்டி கட்சியினரே ரயில் ஓட்டத்தை தொடங்கி வச்சிருக்காங்க.. நிகழ்ச்சிக்கு வந்த பொன்னானவர், ஒன்றிய அரசின் ஆட்சியில் கடைசி மூன்று மாதங்கள் என்ன திட்டம் வந்தாலும் அதன் கிரெடிட் தங்களுக்குத்தான்னு முழங்கிட்டுச் சென்றாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை நடைபயணத்தில் எதிர்பார்த்த அளவில் கூட்டம் வராததால் நிர்வாகிகளை மாநில தலைவர் தூக்கி அடிக்கப் போறதா பேசிக்கிறாங்களே அப்படியா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் மாநில தலைவர் நடைபயணம் செஞ்சிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு, மலைக்கோட்டை பகுதியில் மாநில தலைவர் நடை பயணம் போயிருக்கிறாரு.. அப்போ, தான் எதிர்பார்த்த அளவு தொண்டர்கள் கூட்டம் இல்லையாம்.. குறைந்த எண்ணிக்கையில வந்திருந்த தொண்டர்களும்கூட, மாநில தலைவர் பேச்சை கடைசி வரையிலும் இருந்து கேட்காமல் பாதியிலே கிளம்பிட்டாங்களாம்.. இதனால உச்சக்கட்ட டென்ஷனான தலைவர், தனது பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்படுவதற்கு முன் மலைக்கோட்டை நிர்வாகிகளை பார்த்து கட்சியில் பெயரளவுக்கு செயல்படக்கூடிய நிர்வாகிகளை நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாற்ற வேண்டி இருக்கும்னு எச்சரித்து விட்டு காரில் ஏறி சென்றாராம்.. அவர் எச்சரித்து சென்றது போல் கட்சியில் செயல்படாத நிர்வாகிகள் யார் யார் என லிஸ்ட் எடுப்பதற்கான வேலை திரைமறைவில் தற்போது நடந்துக்கிட்டு இருக்காம்.. இதனால் மலைக்கோட்டை மாநகரில் கட்சியில் அதிரடி மாற்றம் இருக்கும்னு தற்போதைய நிர்வாகிங்க ரொம்பவே டென்ஷனில் இருந்து வர்றாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பவர்புல் பெண்மணிக்கு ஆப்பாக அமைந்த ரகசிய விசாரணையை பற்றி சொல்லுங்க’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
தெலங்கானா மற்றும் புதுச்சேரியை கவனிக்கும் பவுர்புல் பெண்மணியின் பதவி காலம் விரைவில் முடிய இருக்கிறது.. இதனால், மீண்டும் அரசியலில் குதிக்க அவர் ஆர்வமா இருக்கிறாராம்.. பாஜ தலைமையிடம் நல்ல பேர் எடுக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாஜ ஆட்சிக்கு வரும்போது அமைச்சராகிடலாம் என்ற ஆசையில் தமிழகம் பக்கம் செல்லும்போது எல்லாம் தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாராம்.. இது தொடர்பான தகவலை தனது நண்பர்கள் மூலம் பாஜ தலைமைக்கும் தெரியப்படுத்திக்கிட்டு வருகிறாராம்.. அதோட பாஜ தலைமையிடமும் சீட் கேட்டு நச்சரித்து வருகிறாராம்.. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜவில் யாருக்கு சீட் கொடுத்தால் வெற்றி பெறுவாங்கன்னு அக்கட்சி தலைமையும் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகிறதாம்.. இதில் பவர்புல் பெண்மணிக்கு எதிர்ப்பாக அமைந்தது தற்போது தெரியவந்துள்ளது. புதுவையில் புல்லட்சாமியை டம்மியாக்கி விட்டு பல அறிவிப்புகள், ஆய்வு, அரசு விழாவில் பங்கேற்பதும், மேலும் அதிகாரிகள் மூலமாக புல்லட்சாமிக்கு குடைச்சல் கொடுப்பதால் பவர்புல் பெண்மணிக்கு எதிராக மக்கள் மன நிலை உள்ளது. இவர் தேர்தலில் நின்றால் வாக்காளர்களான மக்கள், அவருக்கு ஆப்பு அடிப்பார்கள் என்ற ரகசிய விசாரணை முடிவு பாஜ தலைமைக்கு சென்றுவிட்டதாம்.. இதனால் பவர்புல் பெண்மணி நிலை, கேள்விக்குறியாக உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தலில் போட்டியிட 40சி இருந்தா தான் சீட்டுன்னு இலைக்கட்சியில கெடுபிடியாமே’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘எம்பி தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் எல்லாம் தங்கள் பணியை தொடங்கிட்டாங்க. இலை கட்சியில் எம்பி தேர்தலில் போட்டியிட பலரும் தயங்குகிறார்களாம்.. காரணம் தேர்தலில் போட்டியிட சீட் வேணும்னா முதலில் ரூ.40 சி கொண்டு வந்து தர வேண்டும் என தலைமை கட்டளையிட்டுள்ளதாம்.. தேர்தல் வேலைக்கு கட்சி எல்லாம் பணம் தராது. எல்லாத்தையுமே போட்டியிடுபவர்கள் தான் பார்த்துக்கணும்னு தலைமை கறாராக தெரிவித்துவிட்டதாம். இதனால் யாருமே போட்டியிட முன்வரவில்லையாம். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை ஓட்டம் பிடிக்கிறார்களாம்.. அதோட இப்போது எங்களுக்கு சீட் வேண்டாம். சட்டமன்ற தேர்தல்ல நாங்க பார்த்துக் கொள்கிறோம் என சாக்குப்போக்கு கூறி வருகிறார்களாம்.. அதுமட்டும் இல்லாம கட்சி நிர்வாகிகள் சிலரின் பட்டியலை கொடுத்து தப்பிக்க முயற்சி செய்து வருகிறார்களாம்.. முன்பெல்லாம் அந்த அம்மா இருக்கும் வரை யார் வேட்பாளர் என்று கடைசி வரையும் தெரியாது. அடிமட்ட தொண்டனுக்கு கூட அதிர்ஷ்டம் அடித்து எம்எல்ஏ, எம்பி ஆகிவிடுவார்கள். ஆனால் இப்போது பணம் இருந்தால் தான் சீட் என்ற நிலை மாறியிருக்கு.. இதனால் அடிமட்ட தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.. இனி நாம் எம்எல்ஏ, எம்பி எல்லாம் ஆக முடியாது. அதிர்ஷ்டம் எல்லாம் நம்மை தேடி வராது. இதனால இந்த கட்சியில் இருந்தும் எந்த பலனும் இல்லை என்று புலம்புறாங்களாம்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi