சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசியல் கட்சிகள் கொடி கம்பங்கள் அமைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த ஜனவரி 28ம் தேதி வழங்கிய தீர்ப்பு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மேல் முறையீடு செய்துள்ளன. அவைகள் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் “ஜூலை 2ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றி, அறிக்கை தர வேண்டும். இல்லையெனில் மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ‘அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்வுகளில் நடப்படும் கொடிகளுக்கு தலா ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்க வேண்டும்.இதனால் கொடிக்கம்பங்கள் எண்ணிக்கை குறைந்து விடும்’ என கூறியிருப்பது கவலை அளிக்கிறது. இதுதொடர்பாக அரசு தரப்பில் வலுவான ஆதாரங்களுடன், வழிவழியாக பின்பற்றப்படும் உரிமைகளை பாதுகாக்க சட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கொடி கம்பங்களை அகற்றும் நீதிமன்ற உத்தரவு சட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்: அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்
0