Tuesday, April 16, 2024
Home » கட்சி மாறியதும் கரைந்து போனதா ஊழல் கறை? மோடியின் வாஷிங்மெஷினும் மகாராஷ்டிராவும்

கட்சி மாறியதும் கரைந்து போனதா ஊழல் கறை? மோடியின் வாஷிங்மெஷினும் மகாராஷ்டிராவும்

by MuthuKumar

வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என மிகுந்த முனைப்போடு செயல்பட்டு வருகிறது பாஜ. இந்த முறை பாஜவை எப்படியும் வீழ்த்தி விட வேண்டும் என களமிறங்கியுள்ள எதிர்க்கட்சிகள், ‘இந்தியா’ கூட்டணியை அமைத்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், பத்தாண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த போதும், சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்க வழியில்லாமல் எதிர்க்கட்சி கூட்டணியை சிதறடித்து அதன் மூலம் வெற்றியை சாதகமாக்கி விட வேண்டும் என்பதுதான் பாஜவின் நோக்கமாக உள்ளது.

பத்தாண்டு ஒன்றிய பாஜ ஆட்சியில் எடுக்கப்பட்ட பல்வேறு கொள்கை முடிவுகள், செயல் திட்டங்களால் மக்கள் மத்தியில் அதிருப்தி காணப்படும் நிலையில், அதிக எம்.பி.க்களை கொண்ட வடமாநிலங்களில் தன் செல்வாக்கை நிலைநாட்டவே எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்களை தன்பக்கம் இழுத்து கட்சியை உடைக்க பாஜ முனைப்புக் காட்டுவதாக அரசியல் தலைவர்கள், விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இந்த வகையில், 48 மக்களவை இடங்களைக் கொண்ட மகாராஷ்டிராவில் கட்சிகளை உடைக்கும் சதிராட்டத்தை பாஜ அரங்கேற்றி வருகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து பாஜ போட்டியிட்டு வெற்றி பெற்றது. அப்போது பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ 23, சிவசேனாவுக்கு
18 இடங்களில் வெற்றி பெற்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றது. அதே ஆண்டு மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது. இதிலும், பாஜ – சிவசேனா கூட்டணி அமைத்தன. சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜ – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவியை பாஜ விட்டுத்தராததால் கூட்டணியை விட்டு விலகிய உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணியை உருவாக்கி ஆட்சியைப் பிடித்து முதல்வரானார். அப்போதிருந்தே உத்தவ் சிவசேனாவுக்கும், அவருடன் ஆட்சியில் கூட்டணி சேர்ந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், அமைச்சர்களுக்கும் சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் மூலம் நெருக்கடி தரப்பட்டது. விசாரணை, கைது என நடவடிக்கைகள் தொடர்ந்தன.

உத்தவ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி எம்எல்ஏக்களுடன் 2022 ஜூன் மாதம் பிரிந்து சென்று, உத்தவ் ஆட்சியை கவிழ்த்து, பாஜவுடன் கூட்டணி சேர்ந்து முதல்வரானார். பாஜ தலைவர் தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வரானார். 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதை காரணம் காட்டி சிவசேனா கட்சியும், சின்னமும் ஷிண்டேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஷிண்டே பிரிந்து வருவதற்கு ஏறக்குறைய ஓராண்டு முன்பே 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் சிவசேனா எம்எல்ஏ பிரதாப் சர்னைக் அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில், பாஜவுடன் சிவசேனா மீண்டும் கூட்டணி சேர வேண்டும். அப்படி சேர்ந்தால் தன் மீதும், அப்போது உத்தவ் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த அனில் பரப், ரவீந்திர வாய்கர் ஆகியோர் மீதான விசாரணை நெருக்கடி முடிவுக்கு வரும் என கோரிக்கை விடுக்கிறார். காரணம் ₹175 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கில் பிரதாப் சர்னைக் விசாரிக்கப்பட்டு வந்தார். இவர் தற்போது ஷிண்டே அணியில் உள்ளார்.

ஷிண்டே அணியில் உள்ள பாவனா காவ்லி மீது மகிளா உத்கர்ஷ பிரதிஷ்தான் அறக்கட்டளை நிதியில் ₹7 கோடி முறைகேடு செய்ததாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. இதே வழக்கில் சிவசேனா எம்பி சயீத் கான் கைது செய்யப்பட்டார். ஆனால், ஷிண்டேயுடன் சிவசேனாவில் இருந்து அவர் பிரிந்து வந்த பிறகு அவர் மீது அமலாக்கத்துறை எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோல், சிவசேனா எம்எல்ஏ யஸ்வந்த் ஜாதவ் அவரது மனைவி யாமினி மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், ஷிண்டே அணியில் சேர்ந்த பிறகு இவர்கள் மீது நடவடிக்கை இல்லை.

இப்படி ஷிண்டே தலைமையில் உத்தவ் தாக்கரேயிடம் இருந்து விலகிச் சென்ற பலரின் மீது முறைகேடு வழக்குகள் இருந்துள்ளது. ஆனால், பாஜ கொடுத்தநெருக்கடியை எதிர்த்த எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட. எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் சிவசேனா கட்சி உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஓராண்டு கழித்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து கட்சித் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகனும், மூத்த தலைவருமான அஜித்பவார் ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் மற்றும் பிரபுல் படேல் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் வெளியேறி, ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜ கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வரானார். அவருடன் வந்த 8 பேருக்கும் அமைச்சர் பதவி தரப்பட்டது. ஆனால் இவர்களில் அஜித்பவார் உட்பட 4 பேர் ஊழல் வழக்குகளில் தொடர்பு உடையவர்கள்.

அஜித் பவார்: 2019ம் ஆண்டுக்கு முன் பாரதிய ஜனதா ஆட்சியின் போது, கூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பாக பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அஜித் பவார் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை அஜித் பவார் மீது பணபரிவர்த்தனை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 2019ம் ஆண்டு மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும் அஜித் பவார் துணை முதல்வர் ஆனார். அப்போது அவருக்கு எதிராக ஆதாரம் இல்லை என்றும் எனவே வழக்கை மூட உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இதற்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கை மூடினால் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது

இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஏக்நாத் ஷிண்டே முதல் அமைச்சர் ஆனார். அப்போது அஜித் பவார் மீதான வழக்கை தொடர்ந்து விசாரிக்க விரும்புவதாக கூறிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.ஆனால் குற்றப்பத்திரிகையில் அஜித் பவாரின் பெயர் இல்லை. அஜித் பவார் மீது நீர்பாசன திட்ட ஊழல் வழக்கும் உள்ளது. நீர்பாசன திட்ட ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுனில் தட்கரேயின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை.

ஹசன் முஷ்ரிப்: கோலாப்பூரை சேர்ந்த அமைச்சர் ஹசன் முஷ்‌ரிப் மீது சர் சேனாதிபதி சந்தாஜி கோப்பர்டே சர்க்கரை ஆலை லிமிட்டெட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும், அவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமான கம்பெனிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குகள் உள்ளன.

சகன் புஜ்பால்: 2015ம் ஆண்டு புஜ்பால் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த போது, டெல்லியில் மகாராஷ்டிரா சதன் கட்டிடம், மலபார் ஹில்லில் அரசு விருந்தினர் மாளிகை, அந்தேரியில் பிராந்திய போக்குவரத்து துறை அலுவலகம் ஆகியன கட்டுவதற்கு கான்டிராக்ட் வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக புஜ்பால் உட்பட 17 பேர் மீது வழக்கு உள்ளது. இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் புஜ்பால் மீது பணபரிவர்த்தனை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இது தொடர்பாக புஜ்பால் இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் 17 பேரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரபுல் படேல்: பிரபுல் படேல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராவார். மாநிலங்களவை எம்பியாகவும் உள்ளார். முன்பு ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு லாபம் ஈட்டித் தந்த வழித்தடங்களை தனியாருக்கு வழங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐயும், இதே வழக்கு தொடர்பாக படேல் மீது பணபரிவர்த்தனை மோசடி குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறையும் கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளில் படேல் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவர் மீது குற்றச்சாட்டு பதியப்படவில்லை.

இந்த மோசடி 2008-09ம் ஆண்டு படேல் ஒன்றிய அமைச்சராக இருந்த போது நடந்ததாக கூறப்படுகிறது.
அதிதி தட்கரே: அஜித்பவாருடன் அமைச்சராக பதவியேற்ற அதிதி தட்கரேயின் தந்தை சுனில் தட்கரேயிடம், நீர்ப்பாசன ஊழல் தொடர்பாக தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 2012ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் 2017ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுனில் தட்கரே குற்றவாளியாக சேர்க்கப்படாவிட்டாலும், தனியாக அவர் மீது குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்யலாம் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே, தந்தை மீதான வழக்கில் இருந்து விடுபடும் நிர்ப்பந்தத்தில் அதிதி தட்கரே அணி மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படி ஊழல் விவகாரத்தில், முறைகேடுகளில் சிக்கியவர்களை எல்லாம் தன் பக்கம் இழுத்து கட்சிகளை கூறுபோட்டு வருகிறது பாஜ. இதற்கு காரணம், மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவை தொகுதிகள்தான்.

முன்னாள் எம்எல்ஏக்களை கூட விட்டு வைக்கவில்லை
சிவசேனா, தேசியவாத காங்கிரசை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை உடைக்க அசோக் சவானை பாஜ இழுத்த ஒரு சில வாரங்களிலேயே, கவுன்சிலர்கள் மற்றும் ஒரு சில காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் அசோக் சவான் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர். ஊழல் செய்தவர்கள், சொந்த கட்சியில் வாய்ப்பு வழங்கப்படாமல் ஒதுக்கப்பட்டவர்களை கூட பாஜ குறிவைப்பதற்கு, எந்த வகையிலாவது தங்கள் வாக்கு வங்கி உயர்ந்து விடாதா என்ற எதிர்பார்ப்புதான் காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

நோக்கம் நிறைவேறுமா?
2019ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலுக்குப் பிறகு மகாராஷ்டிரா அரசியலில் பல்வேறு மாற்றங்கள், திருப்பங்கள் அரங்கேறியிருக்கின்றன. பிரதான கட்சிகளை பாஜ உடைத்துள்ளபோதும், சமீபத்தில் நடந்த 2024 மக்களவை தேர்தல் தொடர்பாக இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 26 இடங்களை பெறும் என தெரிவித்திருந்தது. இது கடந்த முறை காங்கிரஸ் கூட்டணி பெற்ற இடங்களை விட 21 இடங்கள் அதிகம். பாஜ கூட்டணிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இது கடந்த முறை கிடைத்ததை விட 19 இடங்கள் குறைவு. இந்த கணிப்பு வெளிவந்த பிறகுதான் அசோக் சவானை தன்பக்கம் பாஜ இழுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதர்ஷ் ஊழலில் தப்பிக்க அசோக்சவான் தாவினாரா?
சிவசேனா, தேசியவாத காங்கிரசை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் சவான் சமீபத்தில் பாஜவில் இணைந்தார். அவருக்கு உடனடியாக மாநிலங்களவை எம்பி பதவி தரப்பட்டது. அசோக் சவான் மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோது, கார்கில் போரில் இறந்த வீரர்களின் மனைவிகளுக்கும், கார்கில் வீரர்களுக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தித்தர ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் உருவாக்கப்பட்டது. 2010ம் ஆண்டு நவம்பரில் இந்த திட்டத்தில் பெரும் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அசோக் சவான். சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை அமைப்புகள் இந்த ஊழலை விசாரித்து வருகின்றன. அசோக் சவான் அரசில் நடந்த இந்த பெரிய ஊழலை அவ்வப்போது வெளிப்படுத்தி இந்த வழக்கை தொடர்ந்து உயிர்ப்போடு வைத்திருந்தவர் பாஜ தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான தேவேந்திர பட்நவிஸ்தான். ஆனால், தற்போது அசோக்சவான் அவரது முன்னிலையில்தான் பாஜவில் சேர்ந்துள்ளார்.

You may also like

Leave a Comment

one × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi