சென்னை: பகுதிநேர ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8-ஆம் தேதி சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப்போவதாக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அறிவித்துள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் 16,500க்கும் கூடுதலான பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
பணியின் போது அவர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பகுதி நேர ஆசிரியர்களின் முதன்மைக் கோரிக்கை அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான். அந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது தான். அதற்கான தகுதியும், திறமையும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்படவில்லை. மாறாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டனர். அதனால் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க முடியும். இதை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் உறுதி செய்திருக்கின்றன. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுப்பது நியாயமல்ல.
பணி நிலைப்பு வேண்டி 12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்கள் அறவழியில் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. பணி நிலைப்பு கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் வரும் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவிப்பு செய்துள்ளனர். அதுவும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடியும் எந்த பயனும் ஏற்படாத நிலையில் தான் அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். மாணவர்களுக்கு பாடம் கற்கும் ஆசிரியர்களை போராட வைப்பதும். அதற்கான சிறைக்கு அனுப்புவதும் அறம் அல்ல. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.450 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும்.
ஆனால், 12 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், சமூகப் பாதுகாப்பையும் அது உறுதி செய்யும். அதற்காக இதை செய்வதில் எந்தத் தவறும் இல்லை. எனவே, பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிலைப்பு கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்; அதன் மூலம் அவர்கள் வரும் 8-ஆம் தேதி நடத்தவிருக்கும் சிறை நிரப்பும் போராட்டத்தை தவிர்க்கச் செய்ய வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.