சிவகங்கை: தே.ஜ. கூட்டணி வெற்றிக்காக, எங்களுக்குள் உள்ள பங்காளி சண்டையை ஒதுக்கி வைப்போம் என அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். சிவகங்கை அருகே நகரம்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் சிலைக்கு நேற்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அகில இந்திய அளவில் தலைமை தாங்குவது பாஜ. தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜ கூட்டணி அமைத்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தேஜ கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜ ஈடுபட்டு வருகிறது. அதற்கு நாங்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம். எங்களுக்குள் உள்ள பங்காளி சண்டையை ஒதுக்கி வைத்துவிட்டு தேஜ கூட்டணி வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம். இவ்வாறு கூறினார்.
பங்காளி சண்டைய ஓரங்கட்டி வைப்போம்: டிடிவி.தினகரன் சொல்கிறார்
0