சேலம்: சேலம் சரகத்தில் கிளிமூக்கு மாங்காய் விளைச்சல் அதிகரிப்பால், அதன் வரத்து கூடியுள்ளது. இதனால் 5 கிலோ மாங்காய் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகளவில் 40 சதவீதம் உற்பத்தி இந்தியாவில் நடக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விருதுநகர், தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சேலம் பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, பங்கனபள்ளி, செந்தூரா, நடுசாளை, குண்டு, இமாம்பசந்த், நீலம் உள்பட பல வகையான மாம்பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் மா மரங்களில் பூ பூக்கும். இவைகள் நன்கு வளர்ந்து ஏப்ரல் முதல் வாரத்தில் மாங்காய் விளைச்சல் தரும்.
கடந்தாண்டு பெய்த மழையால் மாமரங்களில் நல்லமுறையில் பூ பூத்தது. இதன் காரணமாக விவசாயிகள் எதிர்பாராத அளவிற்கு மாங்காய் விளைச்சல் கிடைத்துள்ளது. தற்போது உச்சக்கட்ட சீசன் என்பதால் மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கிளிமூக்கு மாங்காய் வரத்து வழக்கத்தை காட்டிலும் அதிகரித்துள்ளதால், அதன் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இது குறித்து மாம்பழம் வியாபாரிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விளைச்சல் உள்ளது. சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், அயோத்தியாப்பட்டணம், வலசையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மா மரங்கள் உள்ளன. இந்த பகுதியில் மாம்பழம் சீசனின் போது 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் டன் மாங்காய் விளைச்சல் கிடைக்கிறது.
கடந்தாண்டு அனைத்து பகுதிகளிலும் மழை கைகொடுத்ததால் மரங்களில் மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் மாங்காய் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மார்க்கெட்டுக்கு குண்டு, இம்ாம்பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாலை, மல்கோவா, பங்கனப்பள்ளி, கிளிமூக்கு மாங்காய் உள்பட பல ரக மாங்காய் விற்பனைக்கு வரும். சேலம் மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட மாங்காய் மொத்த வியாபாரிகள் உள்ளனர். இங்கு விற்பனைக்கு வரும் மாங்காய்களை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். தற்போது சேலம் பெங்களூரா, இமாம்பசந்த், மல்கோவா, நடுசாளை வரத்து சரிந்துள்ளது. அதேநேரத்தில் குதாதத், பங்கனபள்ளி, செந்தூரா, நீலம், மற்றும் தோத்தாபுரி என்று அழைக்கப்படும் கிளிமூக்கு மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது.
அதிலும் கிளிமூக்கு மாங்காய் வரத்து வழக்கத்தை காட்டிலும் கூடியுள்ளது. இந்த ரக மாங்காய் வரத்து அதிகரிப்பால் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. 5 முதல் 7 கிலோ மாங்காய் ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது. நீலம், செந்தூரா ரூ.50, பங்கனப்பள்ளி ரூ.55 முதல் ரூ.65, குதாதத் ரூ.100 முதல் ரூ.120 என விற்பனை செய்யப்படுகிறது.