குன்னூர் : மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக கூடிய பல்வேறு மூலிகை தாவரங்கள் காணப்படுகின்றன. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கடல் மட்டத்திலிருந்து 830 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பர்லியார் அரசு தோட்டக்கலைப்பண்ணையில் குழந்தை பாக்கியத்தை உருவாக்க கூடிய மருத்துவ குணம் கொண்ட துரியன் பழங்கள் தற்போது சீசன் துவங்கி மரங்களில் காய்த்து குலுங்குகிறது.
இந்த பழங்கள் மிதமான காலநிலையில் அரை வெப்பநிலையில் உள்ள இடமான குன்னுார் அரசு பர்லியார் பழப்பண்ணையில் மட்டும் வளரக்கூடிய தன்மை உள்ளது. இந்த பழத்தை உண்பதன் முலம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை நீக்க கூடிய மருத்துவ குணம் கொண்டதாக பர்லியார் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அங்கு 25க்கும் மேற்பட்ட துரியன் மரங்கள் உள்ளன. வருடத்தில் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரை இந்த துரியன் பழம் காய்க்க தொடங்கும். இந்த பழம் மரத்திலிருந்து தானாக கீழே விழும்.
அதன் பிறகு தான் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அரசு பண்ணையில் கிலோ ரூ.500க்கு விற்கப்படுகிறது. மேலும் பர்லியார் பகுதியில் உள்ள கடைகளிலும் பண்ணையிலிருந்து வாங்கப்பட்ட பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழ்நாடு மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த பழங்களை வாங்க வருவதால் இந்த பழங்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.


