சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 4ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 4ம் தேதி (திங்கள்) காலை 9.30 மணிக்கு, தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மதுரையில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற அதிமுக மாநாட்டை நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு மாநாட்டு குழுவினர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டிய மாநாட்டு குழுவினருக்கு நன்றி தெரிவிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். மேலும், வருகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இன்னும் கூட்டணி குறித்து எந்த முடிவும் அதிமுக சார்பில் எடுக்கப்படவில்லை. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றியும், ஜெயலலிதா பற்றியும் தொடர்ந்து பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகிறார். இதற்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அதிமுக தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால் டெல்லி பாஜ தலைமை, தமிழகத்தில் அதிமுக – பாஜ கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. அதனால், நாளை மறுதினம் நடைபெறும் சென்னையில் அதிமுக தலைமை கழக செயலாளர், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து முக்கிய வியூகம் குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று, அதிமுக – பாஜ கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.