‘‘அ ரசியல் வாழ்க்கை திசை தெரியாம போயிடும் என்பதால் சேலம்காரர் அணிக்கு தாவ தேனிக்காரர் ஆதரவாளர் முடிவாமே’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் சேலம்காரர் கை ஓங்கியதும் தேனிக்காரர் அதிரடியாக நீக்கப்பட்டார். இலை கட்சியில் தன்னை நீக்கியது செல்லாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தேனிக்காரர், கட்சியில் நான் தான் ஒருங்கிணைப்பாளர் என கரைவேட்டி அணிந்து வந்ததோடு காரில் இலை கட்சி கொடியுடன் வலம் வந்தார். ஐகோர்ட் உத்தரவிற்கு பின்னர் தேனிக்காரர் கரை வேட்டி மாறியது. காரில் கொடி இல்லை. இதனால் டெல்டா மாவட்டத்தில் தேனிக்காரரின் ஆதரவாளர்களின் நிலைமை அதோகதியானது. ஐகோர்ட் உத்தரவால் மன்னர் மாவட்டத்தை சேர்ந்த தேனிக்காரர் ஆதரவாளரான மாவட்ட செயலாளர் தான் கடும் அப்செட்டில் இருந்து வருகிறார். நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சரான வைத்தியானவர் பேச்சை கேட்டு தனது ஆதரவாளர்களுடன் தேனிக்காரர் பக்கம் வந்தோம். கட்சி நம்ம பக்கம் எப்படி வந்து விடும் என வைத்தியானவரும் அவ்வப்போது நம்பிக்கை தெரிவித்து வந்தார். ஆனால் இப்போது கட்சி வேட்டி கூட கட்ட முடியாம போயிடுச்சு. இப்படியே போச்சுன்னா நம்ம அரசியல் வாழ்க்கை திசை தெரியாம போயிடும். இதனால் பழையபடி மீண்டும் சேலம்காரர் அணிக்கு சென்றுவிடலாம் என்று முடிவு செய்திருப்பதாக தனது நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளாராம்… இதுதொடர்பாக இலை கட்சியில் பழைய சகாக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் அங்கிருந்து ஆதரவான பதில் இதுவரை வரவில்லையாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கதர் கட்சி பஞ்சாயத்து என்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பஞ்சாயத்து இல்லை. ஆதங்கம் தான். ‘முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா ஞாயிற்றுகிழமை கொண்டாடப்பட்டது. வழக்கமாக இதுபோன்று தலைவர்களின் பிறந்தநாளின்போது கதர் கட்சியினர் காலையிலேயே சென்று தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்களாம். ஆனால் நாகர்கோவில் மாநகர பகுதியில் இந்திராகாந்திக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளபோதிலும் பிறந்தநாளில் கதர் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவில்லையாம். வெறுமையாக நின்ற சிலையை பார்த்து கட்சியினர் நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல கடைசியில் மாலை வேளையில் சென்று முன்னாள் மாவட்ட தலைவர் ஒருவர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாராம். இப்படியா அசட்டையாக இருப்பது என்று தொண்டர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பவர்புல் பெண்மணிக்கு நாடாளுமன்ற தேர்தல் ஆசை வந்திருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் என இரு மாநிலங்களில் அதிகார பதவியில் இருக்கும் பவர்புல் பெண்மணி இசைக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியாக வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருந்து கொண்டே இருக்கிறதாம். கடந்த தேர்தலில் முத்து குளிப்பு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால் இந்த முறை எப்படியும் எம்பியாகிவிட வேண்டும் என்ற ஆசை துளிர்த்துவிட்டதாம். மேலிடத்தில் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறாராம். விருப்ப தொகுதி, எந்தெந்த தொகுதி என கேட்டார்களாம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, வடசென்னை, புதுச்சேரி என நான்கு தொகுதிகளை டிக் அடித்து கொடுத்திருக்கிறாராம். தாமரை தலைமை கன்னியாகுமரியும், தூத்துக்குடி வேண்டவே வேண்டாம், அங்கே வேலைக்கு ஆகாது. வட சென்னையும் கஷ்டம்தான். அட்லீஸ்ட் புதுச்சேரி வேண்டுமானால் பார்க்கலாம் என கூறியிருக்கிறதாம். தாமரையின் அதிகாரப்பூர்வ தகவலுக்காக பவர்புல் பெண்மணி காத்திருக்கிறாராம். எப்படியும் இன்னும் இரண்டு மாதங்களில் இரண்டு மாநில அதிகாரப்பதவியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை, மாம்பழம் உறவு இப்போ எப்பிடி இருக்கு..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘எம்பி எலெக்சனுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், கூட்டணிக்கான வேலையில அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியிருக்கு. தாமரை கட்சியோட ஏற்பட்ட மனகசப்பு காரணமாக, இலை கட்சி அக்கூட்டணியில இருந்து வெளியேறிவிட்டதா அறிவிச்சாங்க. அதேசமயம், ஏற்கனவே அந்த கூட்டணியில இருந்த மாம்பழ கட்சி யாரு பக்கம் இருக்கோம்னு இதுவரைக்கும் பகிரங்கமா அறிவிக்கல. இதனால நாலா புறமும் தங்களோட கூட்டணிக்கு பேச்சுவார்த்தையில இறங்கியிருக்காங்க. மேலிடம் இப்படி இருக்க, மாங்கனி மாவட்டத்துல இருக்குற அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளோட மனநிலை, இன்னமும் இலைக்கட்சி பக்கம் தான் இருக்குனு தொண்டர்கள் பேசிக்குறாங்க. அவங்களோட கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதத அவர்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டு இருக்காங்களாம். குறிப்பா இலைக்கட்சி விவிஐபியோட எப்போதும் தொடர்பில் இருந்துவர்றாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.