திருச்சி: மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஓ.பன்னீர் செல்வம், டிடிவி.தினகரனுக்கு பாஜ மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவை தேர்தல் அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்தலை சந்திக்க திமுக மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதிமுக இன்று மதுரையில் மாநாடு நடத்துகிறது. பாஜ சார்பில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மற்ற கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்த ஓ.பன்னீர் செல்வம் அணியும், அமமுகவும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்நிலையில் மக்களவை தேர்தல் குறித்து ஓபிஎஸ்சுக்கும், அமமுக பொது செயலாளர் தினகரனுக்கும் பாஜ மேலிடம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: அதிமுக- பாஜ கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளன. ஓபிஎஸ் அணியையும், அமமுகவையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என பாஜ மேலிடம் வலியுறுத்தியது. ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. ஓபிஎஸ்சுக்கும், தினகரனுக்கும் தென் மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. எனவே அவர்கள் கூட்டணியில் இருந்தால் நன்றாக இருக்கும் என உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பி உள்ளதாம். இதனால் அதிமுகவிடம் கூடுதலாக 2 சீட்கள் வாங்கி, தினகரனையும், ஓபிஎஸ் மகனையும் தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜ முடிவு செய்தது. இதுபற்றி பாஜ மேலிடத்தில் இருந்து எடப்பாடியிடம் பேசப்பட்டது. அவர் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பாஜ டெல்லி மேலிடம் ஓபிஎஸ்சுக்கும், தினகரனுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது வரும் மக்களவை தேர்தலில் உங்கள் கட்சிகள் போட்டியிட வேண்டாம். அதிமுக – பாஜ கூட்டணியை ஆதரியுங்கள். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுங்கள் என்று கூறப்பட்டதாம். இதைக்கேட்டு இருவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களின் ஆதரவாளர்கள், தொண்டர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்தால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று இருவரும் கருதுகின்றனர்.
இது தொடர்பாக இருவருமே தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி உள்ளனர். ஆனால் பாஜ மேலிட உத்தரவு பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. பாஜவின் பேச்சை கேட்டுதான் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். எனவே கட்டாயம் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என இருவருமே உறுதியாக உள்ளார்களாம். ஆனாலும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுக்கி வைக்க இருவருக்கும் பாஜ மேலிடம் கடும் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜ மேலிடத்தின் இந்த அதிரடி உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.