புதுடெல்லி: குற்றம் சாட்டப்பட்டவரின் விடுதலைக்கு, மருத்துவ ரீதியாக அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது மட்டுமே காரணமாக இருக்க கூடாது. மன நல பாதிப்புகள் சட்டப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட வேண்டும்’ என நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவைகளுக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் மசோதாக்களை ஆய்வு செய்த பாஜ எம்பி பிரிஜ்லால் தலைமையிலான உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை மாநிலங்களவையில் சமர்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், ‘இந்திய தண்டனை சட்டத்தில் மனநிலை சரியில்லாத நபர் என்கிற வார்த்தை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு தற்காப்பாக இருக்கிறது. மன நலத்திற்கான மருந்து எடுத்துக் கொள்வது, சிகிச்சை பெறுவது போன்ற மருத்துவ ரீதியான காரணங்கள் மட்டுமே குற்றம்சாட்டப்பவர்களை விடுவிப்பதற்கான காரணமாக இருக்க கூடாது. சரியான பாதுகாப்பை கேட்பதற்கு சட்டப்பூர்வமாக மனநல பாதிப்புகள் நிரூபிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் சட்டத்தின் நோக்கமே பாதிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.