புதுடெல்லி: கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் வண்ண புகையை உமிழும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே இருவரும் அதே வகையான குண்டுகளை வீசினார்கள்.
இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சாகர் சர்மா, மனோரஞ்சன், நீலம் ஆசாத், அமோல் ஷிண்டே ஆகிய நான்கு பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அதேப்போன்று இந்த குற்றச்சம்பவத்திற்கு உதவிய மகேஷ் குமாவத், லலித் ஜா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து விரிவான விசாரணைக்கு பிறகு டெல்லியில் உள்ள வெவ்வேறு சிறைகளில் மேற்கண்ட ஆறு பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் ஆகிய இருவருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று நிபந்தை ஜாமீன் வழங்கியது.