டெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த புகாரில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த புகார் குறித்து நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் மஹிவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என பாஜவின் சர்ச்சைக்குரிய எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிஷிகாந்த் எம்.பி.தான் பகுஜன் சமாஜ் கட்சி முஸ்லிம் எம்.பி.யை தீவிரவாதி என மக்களவையில் பகிரங்கமாக விமர்சித்தவர். இந்த குற்றச்சாட்டுகளை மஹுவா மொய்த்ரா, ஹரிநந்தானி திட்டவட்டமாக மறுத்தனர்.
இந்த புகார் குறித்து நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தியது. இந்த குழு 500 பக்க அறிக்கையை தயார் செய்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த புகாரில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 எம்.பி.க்களில் 6 பேர் மொய்த்ராவை நீக்க வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்ற நன்னடத்தைக் குழுவின் அறிக்கை மக்களவை சபாநாயகரிடம் நாளை அளிக்கப்பட உள்ளது.