டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்துக்கு பின் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% மகளிர் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. 27 ஆண்டுகளுக்கு மேல் இருந்த முக்கிய கோரிக்கையான இதை மத்திய அரசு கொண்டு வருவதை பல்வேறு தரப்பினர் வரவேற்று தெரிவித்தனர். நேற்று மதியம் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.
அப்போது இந்த மசோதா மீது முதல் உரையை நிகழ்த்திய பிரதமர் மோடி, “வாஜ்பாய் ஆட்சியின்போது பல முறை மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகம் இல்லாததால் அது நிறைவேறவில்லை. திங்கட்கிழமை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு கேபினட் ஒப்புதல் வழங்கியது. இதற்கு அனைத்து கட்சி எம்பிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.” என்றார். இந்நிலையில், மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க மசோதா வழிவகை செய்யும்.