சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாம் நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது. தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படவுள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கும், முதல்வர்களுக்கும் நான் கடிதம் அனுப்பி இருக்கிறேன்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா நம் சார்பில் ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்த கருத்தை விளக்குவார்கள். தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்னை அல்ல. தமிழ்நாட்டின் பிரச்னை. பல மாநிலங்களின் பிரச்னை. எனவே திமுக எம்பிக்கள் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்புகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும். உடனடியாக டெல்லியில் தமிழ்நாட்டு எம்பிக்களின் கூட்டத்தை நடத்தி அவர்களது கருத்துகளையும் கேட்டு செயலாற்றிட வேண்டும்.
மும்மொழி கொள்கை பிரச்னையில், நம் வாதங்களை மிக எச்சரிக்கையோடு வைக்க வேண்டும். இந்தித் திணிப்பைத்தான் நாம எதிர்க்குறோமே தவிர இந்தி மொழியையோ, அந்த மக்களையோ அல்ல அதனால், இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம். “எங்கள் மாநிலத்தில் இருமொழிக் கொள்கை மூலமாக அடைந்திருக்கும் வளர்ச்சியைப் பாருங்கள்-உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் சென்று பெரிய பொறுப்புகளில் இருப்பதை கவனியுங்கள்”- என அவர்களும் நம் தரப்பு நியாயங்களை புரிந்து கொள்ளும் வகையில் பேச வேண்டும்.
“இந்தி படிக்கவில்லை என்றால் நிதி தர மாட்டோம் என்று சொல்வது சர்வாதிகாரம் இல்லையா?” என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும்.நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் போது அனைத்து திமுக எம்பிக்களும் தவறாமல் அவையில் இருக்க வேண்டும். மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், மக்களின் நலனுக்காவும் தி.மு.க. எம்பிக்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.