ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் கொட்டித் தீர்த்த கனமழையால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் தமிழகம்- கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள கர்நாடகா எல்லைப் பகுதியில் பர்கூர் மலைப்பகுதி உள்ளது. அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. பர்கூர் மலைப்பகுதி அருகே உள்ள வறட்டுப்பள்ளம் அணை பகுதியில் நள்ளிரவு 68 மி.மீ மழை பெய்தது.
இப்பகுதியில் அதிகாலை 1.30 மணி அளவில் பெய்த கனமழை காரணமாக அந்தியூர்-பர்கூர்-கொள்ளேகால் மலைப்பாதையில் செட்டிநொடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் மலைப்பாதை முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலை முழுவதும் மண் மற்றும் கற்கள் குவிந்தது. மேலும் சில இடங்களில் தார் சாலைகள் பெயர்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக தமிழகம்-கர்நாடகம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழகத்திலிருந்து கர்நாடக செல்லும் வாகனங்கள் செல்லம்பாளையம் வனசோதனை சாவடியில் நிறுத்தப்பட்டது.
கர்நாடகத்திலிருந்து தமிழகம் வரும் வாகனங்கள் பர்கூர் காவல் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளன. பர்கூர் போலீசார், வனத்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண் குவியல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியத்திற்கு பிறகு சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து துவங்கும் என நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.