சென்னை: பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிடக்கோரி சி.குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.இளையபெருமாள், அரசு தரப்பில் பிளீடர் பி.முத்துக்குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.அனிதா ஆகியோர் ஆஜராகினர்.
அரசு பிளீடர் பி.முத்துக்குமார் வாதிடும்போது, மூத்த குடிமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டசத்தின் அடிப்படையில், மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். அந்த சுற்றறிக்கையில், அனைத்து காவல் நிலையங்களின் வரம்புக்குள் வரும் இல்லங்களில் உள்ள மூத்த குடிமக்களின் பட்டியலை வைத்திருக்க வேண்டும். மூத்த குடிமக்களை சந்திக்க வேண்டும்.அப்பகுதிகளில் போலீஸ் பட்டா புத்தகங்களை வைத்திருக்க வேண்டும். மூத்த குடிமக்கள் தரும் புகார்களுக்கு முன்னுரிமை தந்து அதன் மீது சம்மந்தப்பட்ட போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
உடல் ரீதியாவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கும் மூத்த குடிமக்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு தெருக்களில் அனாதையாக விடப்பட்டுள்ள மூத்த குடிமக்களை அங்கிருந்து மீட்டு அவர்களை அரசு விடுதிகளில் சேர்க்க வேண்டும். மூத்த குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு குடியிருப்பு சங்கங்கள், அரசு சாரா அமைப்புகள், இளைஞர்கள் போலீசாருக்கு உதவ வேண்டும். அனைத்து போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்கள் மூத்த குடிமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மூத்த குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். அரசு தரப்பின் இந்த தகவலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.