திருப்பூர்: அவினாசி அருகே அரசு பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை புறக்கணித்து பெற்றோர், குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழை கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே பெருமாநல்லூரை அடுத்த வள்ளிபுரம் ஊராட்சி காளிங்கராயன்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு சமையலராக ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த தீபா என்பவர் காலை சிற்றுண்டி சமைத்து மாணவர்களுக்கு பரிமாறி உள்ளார். உணவு சமைத்த தீபா பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் ஒரு தரப்பு பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உணவு வேண்டாம். குழந்தைகளின் மாற்று சான்றிதழை தாருங்கள் எனவும் கேட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில்,
காளிங்கராயன்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் உணவு திட்டத்தில் தீபா என்பவர் தான் சமையல் செய்து வருகிறார். அனைத்து குழந்தைகளுக்கும் அரசு உத்தரவுப்படி அறிவுறுத்தப்பட்ட உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அவருக்கு பள்ளியில் சமையல் செய்யவோ, பணியாற்றவோ எந்த எதிர்ப்பும் இல்லை. தொடர்ந்து, தீபா அதே பள்ளியில் பணியாற்றுவார் என்றார்.
இதையடுத்து 2வது நாளாக நேற்றும் பள்ளியில் தீபா தான் சமையல் செய்துள்ளார். மாணவ-மாணவிகள் அதனை சாப்பிட்டுள்ளனர். அங்கு வேறு எந்த பிரச்னையும் நடைபெறவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுபோன்ற பிரச்னைகள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த 2018ல் சேவூர் குட்டகம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலைக்கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் என்பவரை சமையல் செய்ய விடாமல் தடுத்து வன்கொடுமையில் சிலர் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.