‘‘பேச முடியாமல் போவது என்பது
பலருக்கும் குறையாக இருக்கலாம்.
முக்கியமாக தங்களுடைய குழந்தைகள்
தங்களை அப்பா, அம்மா என அழைக்க
மாட்டார்களா என பல பெற்றோர்களுக்கும் ஏக்கம் இருக்கும். சிறு வயதில் பேச முடியவில்லை என்றால் அதன் பின்னர் பேச்சே வராது என பலரும் நினைப்பார்கள். ஆனால் அது உண்மையில்லை’’ என்கிறார் சென்னையை சேர்ந்த ‘அந்தாதி ரீஹெப்’ மையத்தின் பேச்சு சிகிச்சையாளர் வைஷ்ணவி.
‘‘சரியான பயிற்சிகள் கொடுத்தால் பேச்சு வராத குழந்தைகளையும் பேச வைக்கலாம்’’ என்கிறார் வைஷ்ணவி. இவர் அந்தாதி ரீஹெப் தெரபி என்ற பெயரில் யூடியூப் தளத்தில் பல வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். பேச முடியாதவர்களுக்கு எப்படி சிகிச்சையளிக்கிறார் என்று அவரே விவரித்தார்.
‘‘குழந்தைகளை பொறுத்தவரை 1 முதல் 2 வயதிற்குள் ஏதாவது ஒரு வார்த்தையை பேசியாக வேண்டும். முதலில் குழந்தைகள் சைகைகளால்தான் பேசத் தொடங்குவார்கள். அடுத்து வீட்டில் என்னென்ன இருக்கிறது என அவர்கள் பார்த்து பழகத் தொடங்குவார்கள். சைகைகளை தாண்டி தங்களுக்கு வேண்டுமென்பதை கத்தியோ அல்லது ஏதாவது ஒரு சத்தத்தை கொடுத்துதான் தெரிவிப்பார்கள். இதில் கடைசி நிலைதான் அவர்களிடமிருந்து பேச்சு வரும்.
அப்படி பேசியிருந்தால் மட்டுமே அந்த குழந்தை தொடர்ந்து பேசி பழகும். ஆனால் தற்போதைய நிலையில் குழந்தைகள் பேசுவதற்கான நிலைமை இல்லாமல் போக பல காரணங்களை குறிப்பிடலாம். ஒரு குழந்தைக்குத் தெளிவாகக் காது கேட்கும் திறன் இருந்தால், சீக்கிரமே பேச ஆரம்பித்துவிடும். காது மந்தமாக இருந்தால், பேசுவதில் குறை இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் மூளையின் செயல்பாடு.
ஒரு குழந்தை தன் காதில் அம்மா என்ற வார்த்தையைதான் முதலில் கேட்கும். அதன் பிறகு அவர்களைப் பார்த்து அவர்தான் அம்மா என்று அறிந்து ‘அம்மா’ என்று அழைக்கும். கேட்டு, அறிந்து, பேசுவது என இந்த மூன்று பகுதியையும் வளப்படுத்தும் திறன் மூளைக்கு உள்ளது. அதற்கு சரியான ஊட்டம் கிடைக்கவில்லை என்றால் அதன் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். விளைவு காது கேட்பது குறைவாக இருந்தால் பேச்சு வராது அல்லது தாமதமாகும். தாய்ப்பாலில் போதிய ஊட்டம் இல்லையென்றாலும், குழந்தையின் மூளை வளருவதற்கான போதிய கொழுப்புச்சத்து கிடைக்கவில்லை என்றாலும் இந்த பிரச்னை ஏற்படும். இவை எல்லாவற்றையும் விட பெற்றோர்கள் குழந்தையிடம் ேபசிக் கொண்டே இருக்க வேண்டும்.
அவர்களிடம் அம்மாவைப் பார், அம்மாவின் செல்லம், அப்பா எங்கன்னு எல்லாம் அவர்களிடம் பேசிக் கொண்டே இருக்கணும். நாம் பேசும் போது அவர்களும் நம்முடன் ‘ஆ.. ஊ…’ன்னு ேபச ஆரம்பிப்பாங்க. இப்படி பேசும் போது குழந்தையின் மூளை தூண்டப்படும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளிடம் பேசுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போகிறது. அவர்களின் மூளை தூண்டப்படுவதில்லை. பாதி குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே மொபைல் போன்களை பழக்கப்படுத்தி விடுகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு பேசுவதற்கான இடத்தை பெற்றோர்கள் உருவாக்காமல் விட்டு விடுகின்றனர்.
பெற்றோர்கள் தாங்கள் வேலை செய்யும் போது குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக அவர்களுடைய கையில் மொபைல் போன்களை கொடுப்பதால் குழந்தைகள் பேசவோ, தனக்கு இது வேண்டும் என்று கேட்கவோ குரலை பயன்படுத்தாத நிலைமை ஏற்படுகிறது. இப்படி தொடர்ந்து நடப்பதால் குழந்தைகளுக்கு காலப்போக்கில் பேச்சு வராமல் போகிறது. இதோடு ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் பேச முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கு சில செயல்களை வைத்து கண்டறியலாம்.
* பெயர் சொல்லி அழைக்கும்போது திரும்பாமல் இருந்தால்,
* கண் தொடர்பு செய்யாமல் இருந்தால்,
* சைகைகள் செய்யாமல் இருந்தால்,
*தனிமையில் விளையாடுவதை விரும்புவது. இது போன்ற குறைபாடுள்ள குழந்தைகளை சரியாக கவனிக்க வேண்டும்.
சரி வர பேசுவதை கவனிக்காத குழந்தைகள் அல்லது உளவியல் சார்ந்து பேச முடியாத குழந்தைகள் இந்த பிரச்னைகளை எதிர் கொள்கின்றனர். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளும் சரி வர பேச மாட்டார்கள்’’ என்றவர் இந்த பிரச்னைகளை மாற்றுவதற்கு பெற்றோர்கள் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே தங்களுடைய கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
‘‘நாம் முக்கியமாக குழந்தைகளிடம் உரையாட வேண்டும். குழந்தைகள் தங்களுக்கு தேவையானதை நம்மிடம் கேட்க பழகவேண்டும். குழந்தைகளிடம் விளையாடுவது மிகவும் முக்கியமானது. ஆனால் இவை எல்லாம் கடைபிடித்தும் குழந்தைகள் பேசவில்லை என்றால் அதற்கான சிகிச்சை முறைகளும் இருக்கின்றன. இந்த சிகிச்சையில் மருந்து, மாத்திரைகள் எல்லாம் கிடையாது. அவர்களை பேச வைப்பதற்கான பயிற்சி வகுப்புகளைதான் நாங்க வழங்கி வருகிறோம். ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்டவர்கள் என்பதால், தனித்தனியான வகுப்புகளைதான் நடத்துகிறோம். முதலில் அந்த குழந்தை எவ்வளவு வார்த்தைகள் வரை தெரிந்து வைத்திருக்கிறது என்பதை கண்டுபிடிப்போம். சில குழந்தைகளுக்கு மூன்று வயதாகி இருக்கும்.
ஆனால் அவர்கள் ஒரு வயது குழந்தைகள் பேசும் வார்த்தைகளைதான் பேசுவார்கள். அவர்களின் மனநிலையும் அப்படித்தான் இருக்கும். குழந்தைகளிடம் பேசும் போது தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் அவர்களின் வயதிற்கேற்ப பயிற்சி அளிப்போம். இதில் முக்கியமானது ஆட்டிசம் குழந்தைகளை கையாள்வதுதான். நமக்கு ஒரு சத்தம் சாதாரணமாக கேட்கும். ஆனால் அதுவே ஆட்டிசம் குழந்தைகளுக்கு பெரிதாக இருக்கும். அவர்களுக்கு அது தொந்தரவும் ஏற்படுத்தும்.
இந்த குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார வைப்பதும் கடினம். அவர்களின் செயல்பாட்டினை புரிந்து கொண்டுதான் பயிற்சிகள் அளிப்போம். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் சரியாக வராது. பள்ளிப் பாடங்களை மற்ற குழந்தைகள் போல் கவனித்து எழுத மாட்டார்கள். இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தால் அவர்களும் மற்ற குழந்தைகள் போல் படிக்கவும் எழுதவும் செய்வார்கள். திக்கி திக்கி பேசுபவர்களையும் சரியாக பேச வைக்கலாம். குழந்தை பருவத்தில் இருக்கும் போதே இதை கண்டறிய முடியும். அவர்கள் பேசும் வேகத்தை குறைத்து, அதற்கான பயிற்சி அளித்தால் நாளடைவில் திக்குவது குறைந்துவிடும்.
இதிலும் சில வகைகள் இருக்கிறது அவர்களுடைய பேசும் திறனை பொறுத்துதான் அவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சையை கொடுக்கலாம் என்பதை முடிவு செய்ய முடியும். மேலும் நாங்க ஆசிரியர்களுக்கும் பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு எப்படி பாடங்கள் நடத்த வேண்டும் என்று பயிற்சியும் அளித்து வருகிறோம்.
எல்லா பயிற்சிகளுமே விளையாட்டோடு சேர்ந்து அளிக்கிறோம். மேலும் ஒவ்வொரு வார்த்தையும் எவ்வாறு பேச வேண்டும் என்று சொல்லித்தரும் போது, அவர்கள் நாளடைவில் பேச ஆரம்பித்துவிடுவார்கள். பேச்சு பயிற்சி, செயல்முறை பயிற்சி போன்ற பயிற்சிகளை சிறப்பு கல்வி நிபுணர்களால் குழந்தைகளுக்கு ஏற்றாற் போல் கொடுக்கிறோம்.சுயமாக பேச முடியாத குழந்தைகள் பயன்படுத்தும் விதமாக சில நுண்ணறிவு தளங்கள் குறித்தும் சொல்லித் தருகிறோம்’’ என்றார் வைஷ்ணவி.
தொகுப்பு: மா.வினோத்குமார்