சென்னை: சோழவரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாடியநல்லூர் அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் சண்டே சதீஷ், முத்து சரவணன் இருவரும் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களாக வைக்கப்பட்டிருந்தது. நேற்று முத்து சரவணன் உடலை அவரது தந்தை வாங்க மறுத்துவிட்டார். அதேபோல் சண்டே சதீஷின் உடலையும் பெற்றோர்கள் வாங்கவில்லை. நேற்று முன்தினம் பொன்னேரி மாவட்ட துணை ஆட்சியர் கவுசல்யா மற்றும் தாசில்தார் மதிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்பு மருத்துவமனைக்கு தபால் மூலம் அறிக்கை அனுப்பினர். தபால் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்குள் வராத நிலையில் சண்டே சதீஷ் மற்றும் முத்து சரவணன் உடல்கள் ஸ்டான்லி மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்தன. இந்நிலையில், சண்டே சதீஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு தயாராக இருந்தது. அதன்பின்பு முத்து சரவணன் தந்தை மகனின் உடலை வாங்க ஒப்புக் கொண்டதின் பேரில் 2 உடல்களும் பொன்னேரி வட்டாட்சியர் கவுசல்யா மற்றும் தாசில்தார் மதிவண்ணன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சுமார் மூன்று மணி நேரமாக நடந்த பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சண்டே சதீஷின் உடலை அவரது தந்தை மற்றும் சித்தி வாங்க மறுக்கவே போலீசார் உதவியுடன் சண்டே சதீஷின் தாய்மாமன் மற்றும் உறவினர் முன்னிலையில் காசிமேடு மின் மயானத்தில் நேற்று இரவு தகனம் செய்யப்பட்டது. அடுத்தபடியாக, முத்து சரவணன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது சொந்த ஊரான கமுதிக்கு எடுத்துச் சென்றனர். இன்று இறுதிச் சடங்கு செய்யப்பட உள்ளது. சோழவரம் பகுதியில் இரு ரவுடிகளும் நடத்தி வந்த ரவுடி சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.